உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு: 6 வீடுகள் இடிந்தன: 20 பேர் மாயம்

3

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று (செப் 18) மீண்டும் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மாயமான 20 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.



உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங் கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 15க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று (செப் 18) சாமோலி மாவட்டத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 6 வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்பட்டபோது ஏழு பேர் வீடுகளுக்குள் இருந்தனர், அவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர், ஐந்து பேர் இன்னும் காணவில்லை. சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு படையினர் விரை ந்துள்ளனர். மேலும் மற்றொரு நிலச்சரிவில் 15 பேர் மாயமாகியுள்ளனர். 14 பேர் காயம் அடைந்து உள்ளனர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி மீட்டனர். இது குறித்து உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சாமோலி மாவட்டத்தின் நந்தநகர் காட் பகுதியில் பெய்த கனமழையால் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்ததாக வருத்தமளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.


மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைவரின் பாதுகாப்பிற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement