சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்: விசாரணைக்கு உத்தரவு

13

திருவனந்தபுரம்: சபரிமலையில் துவார பாலகர்கள் சிலையில் வேயப்பட்ட தங்க கவசங்களின் எடை 4 கிலோ வரை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அய்யப்பனை தரிசிக்கின்றனர்.

கோவில் திருமுற்றத்தில், அய்யப்பன் சன்னிதிக்கு முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு, 1999ம் ஆண்டில் தங்க கவசம் சார்த்தப்பட்டது.

இவை, 40 ஆண்டுகள் வரை பழுது இல்லாமல் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், ஆறே ஆண்டு களுக்குள் கவசத்தில் பழுது ஏற்பட்டது.

இதையடுத்து, பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த, 1999ல் தங்க கவசத்தின் எடை 42.8 கிலோவாக இருந்த நிலையில், 2019ல் பழுது பார்ப்பதற்காக அகற்றி, சென்னைக்கு கொண்டு செல்லும் போது நான்கு கிலோ குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துவாரபாலகர் சிலையில் இருந்த தங்க கவசங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால், சென்னையில் இருந்து அதை மீண்டும் கொண்டு வருமாறு சமீபத்தில் கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

அப்போது நடத்தப்பட்ட சோதனையில்தான், தங்க கவசத்தின் எடை குறைந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு அதிகாரி களுக்கு கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement