சீரமைக்காத ரோடுகள், புதர் மண்டிய சிற்றோடை பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 15வது வார்டு

ஒட்டன்சத்திரம்: சீரமைக்கப்படாத தெரு ரோடுகள், புதர் மண்டிய சிற்றோடை என ஒட்டன்சத்திரம் நகராட்சி 15 வது வார்டு மக்கள் பிரச்னையின் பிடியில் உள்ளனர்.

காளியம்மன் கோயில் மேற்கு, சாஸ்தா நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் உள்ள விரிவாக்க பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.

சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் தெற்கு பகுதியில் செல்லும் கழிவு நீர் ஓடையில் புற்கள் முளைத்து காணப்படுகிறது. கோயிலின் கிழக்குப் பகுதியில் வரும் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி உள்ளதால் சுகாதாரம் பாதிக்கிறது. நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

கொசுக்களால் தொல்லை சாய்மணிகண்டன், பா.ஜ., நகர துணைத்தலைவர்: தெருக்களில் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. பாதசாரிகள், டூவீலர் ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் தெரு சாக்கடையில் புதர் மண்டி ஓடையை மறைத்துள்ளது. ஓடையை அடிக்கடி துார்வாரி கொசுத்தொல்லையை போக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் முளைத்துள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். விரிவாக்க பகுதிகளில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

ரோடுகள் படுமோசம் கே.திருமூர்த்தி, அ.தி.மு.க., வார்டு செயலாளர்: குடிநீர் குழாய்கள் அமைக்க தெரு ரோடுகளை தோண்டி சேதப்படுத்தி விட்டனர். இதனை சீரமைக்க வேண்டும். காந்திநகர் பிரிவு ரோட்டில் இருந்து ஐயப்பன் கோயில் வரை தெருவிளக்குகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ரயில்வே கேட் தெற்கு பகுதியில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் அமைக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் எதிரில் இருந்த தரை மேல் தொட்டியை மீண்டும் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றம் ஜெயமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): சாஸ்தா நகர் பகுதியில் சாக்கடை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது .

அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது இப்பகுதியில் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மெயின் ரோட்டில் இருந்து தோட்டத்து சாலை வரை தெருவிளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. சாஸ்தா நகர் பகுதியில் சிறு பாலங்கள் அமைக்கப்படும். சாக்கடை பணிகள் முடிந்ததும் தெரு ரோடுகள் அனைத்தும் சீரமைக்கப்படும். வார்டு மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement