அங்கே 'ஆக்டிவ் மோடு' இங்கே 'கோமா மோடு'; போலி போராளிகளின் இரட்டைவேட அரசியல்

தமிழ் சினிமா உலகில் சிலர் இருக்கிறார்கள். உலகில் எங்கோ நடக்கும் பிரச்னைகளுக்கு இந்தியாவை குறை சொல்வர். அதே பிரச்னை தமிழகத்தில் என்றால்... கண்ணை மூடிக்கொண்டு 'கோமா' நிலைக்கு போய்விடுவர்; ஐம்புலன்களும் அடங்கி ஒடுங்கிவிடும். அப்படித்தான், இஸ்ரேல் -- பாலஸ்தீன போர் குறித்து, 'கருத்து கந்தசாமி'களாக மூக்கை நீட்டி, மேடையில் பொங்கியுள்ளனர் நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர்.

பாலஸ்தீன படுகொலைக்கு எதிராக சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய இவர்கள், 'இனப்படுகொலை எங்கு நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும்' என்றனர். பிரகாஷ்ராஜ், அமீர் பேசும்போது, 'காஸா போருக்கு அமெரிக்க துணைபோகிறது; பிரதமர் மோடியும் துணை நிற்கிறார்' என்றனர்.

உண்மை



என்ன உண்மையில், போரை நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இந்தியா, இஸ்ரேலுக்கு துணைபோவது போல இவர்களது பேச்சு இருந்தது. பிரதமராக மோடி பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில், பாலஸ்தீன நாட்டிற்கு நிதி உதவி, உள் கட்டமைப்பு உள்ளிட்ட பலவிதங்களிலும் அதிகம் உதவி புரிந்துள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியா சார்பில் அந்நாட்டிற்கு உள் கட்டமைப்பு, ஐடி டெக் பார்க், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு 141 மில்லியன் 'அமெரிக்க டாலர்' நிதி உதவி அளித்துள்ளது. மேலும் பாலஸ்தீனத்திற்கு உதவும் ஐக்கிய நாடுகளின் நிதி அமைப்பிற்கு, ஆண்டுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை 2018 முதல் இந்தியா வழங்கி வருகிறது.

மோடிக்கு கவுரவம்



கடந்த, 1980ல் பாலஸ்தீன நாட்டிற்கு இங்கே டில்லியில் தூதரகம் துவங்கப்பட்டது. அதன்பின் இங்கு பல பிரதமர்கள் பதவி வகித்தனர். அவர்கள் யாருக்கும் கிடைக்காத பாலஸ்தீன நாட்டின் உயரிய விருது, 2018ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்திய பிரதமர், அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை, மோடியை மட்டுமே சாரும்.

இதுகூட தெரியாமல் மோடியை குற்றம்சாட்டுகின்றனர் பிரகாஷ்ராஜ், அமீர் போன்றோர். இவர்களை அழைத்து மேடையில் பேச வைத்திருக்கின்றனர். கொடைக்கானலில் வன நிலத்தில் சட்ட விரோதமாக வீடு கட்டியவர் இந்த பிரகாஷ்ராஜ். இவர் உத்தமர் போல பேசி வருகிறார். பாலஸ்தீன படுகொலை பற்றி பேசுபவர்கள், தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு என்றாவது குரல் கொடுத்துள்ளார்களா? இல்லை.

'லாக்கப் மரணம்' பற்றி சினிமா எடுத்து கல்லா கட்டிய வெற்றிமாறன், தி.மு.க.,ஆட்சியில் நடந்த 25 லாக்கப் மரணங்கள் பற்றி வாய் திறக்கவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம், வேங்கைவயல் பிரச்னை, ஆணவ படுக்கொலைகள் போன்ற வற்றில் ஊமையாகிப்போன இவர்கள், கண்டன அறிக்கைகூட விடவில்லை.

'எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, கொல்லப்படுகிறார்களோ, அங்கு ஒரு கலைஞனாய், மனிதனாய் குரல் கொடுப்போம்' என்கின்றனர். நிஜத்தில் இவர்கள் அப்படி செய்தார்களா? நம் அண்டை நாடான வங்க தேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டபோது, உடமைகள் சூறையாடப்பட்ட போது இவர்களின் 'மனிதம்' என்னவானது? ஏன் அதற்கு மட்டும் வாயே திறக்கவில்லை. பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் தொடரும் போர் பற்றி ஏன் பேசாமல் உள்ளனர்; அங்கு நடப்பது இனப்படுகொலையாக தெரியவில்லையா.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் பல ஆண்டுகளாக நடக்கிறது; இப்போது மட்டும் பேசுகிறார்கள்? காரணம், தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை ஈர்க்கவே கண்டன கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் பங்கேற்ற கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும், எந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என, சற்றே உற்று நோக்கினால் உண்மை புலனாகும்!

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement