‛‛சேட்டான்''கள் செய்த சேட்டை: பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி: மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள்!!

கொச்சி : முறைகேடாக சொகுசு வாகனங்களை பூடான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த புகாரில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ‛ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் நடக்கும் இந்த ரெய்டு கேரளாவில் சுமார் 30 இடங்களில் நடந்தது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான். பிருத்விராஜ் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார். அதே போல் நடிகர் மம்முட்டியின் மகனான நடிகர் துல்கரும் நடிப்பு தாண்டி படங்களும் தயாரிக்கிறார். பொதுவாகவே மலையாள நடிகர்கள் சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், விதவிதமான வெளிநாட்டு உயர் ரக கார்களை பல நடிகர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிலர் பூட்டான் வழியாக ஆடம்பர வாகனங்களை முறைகேடாக இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதை தடுக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் ‛ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் சுங்க அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
குறிப்பாக கேரளாவில் மட்டும் 30 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இதில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்தது. வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத வாகன இறக்குமதியில் இவர்கள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்படி இந்த ரெய்டை அதிகாரிகள் மேற்கொண்டனர். அவர்கள் வாங்கிய உயர் ரக வாகனங்கள் குறித்து சரிபார்ப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதே போல் தொழிலதிபர்கள் மற்றும் சில கார் ஷோரூம்களிலும் இந்த சோதனை நடக்கிறது.
குறைந்த விலையில் பூடானில் ஏலம் விடப்பட்ட சொகுசு ரக வாகனங்களை முறையான வரி செலுத்தாமல் இந்தியாவிற்கு கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர வாகனங்கள் இமாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்காலிக முகவரிகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நிறைய வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.















மேலும்
-
அ.தி.மு.க., அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல்
-
மோகன்லாலுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது நடிகர்கள் ஷாருக், பாஸ்கருக்கு தேசிய விருது தேசிய விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
'விப்ரோ' பிரேம்ஜிக்கு சித்தராமையா கடிதம்
-
தெருவில் திரிந்த 20 பசுக்கள் அல்வா, பூரி தின்றதால் பலி
-
வருவாய் உபரி ஈட்டுவதில் பின்தங்கிய தமிழகம்: அன்புமணி
-
இளைஞர்களே போராடுங்கள்!