கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிப்பு: பின்னணி என்ன

2

கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், தீர்மானக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்ட செயலாளராக, துரை செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.


சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் திமுக, பலவீனமாக இருக்கும் தொகுதிகளை அடையாளம் கண்டு, சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த முறை திமுக படுதோல்வி அடைந்த கோவை மாவட்டத்தில் தலைமை கவனம் செலுத்தி வருகிறது. கோவை மாநகர் மாவட்டத்தில் வெற்றி பெற வேண்டுமெனில், கட்சியினரின் அதிருப்திக்கு ஆளான மாவட்ட செயலாளரை மாற்றினால் மட்டுமே முடியும் என்று தலைமைக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீர்மானமாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு, பெயரளவுக்கு தீர்மானக்குழு செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய மாவட்ட செயலாளராக பீளமேடு பகுதி திமுக செயலாளராக இருக்கும் துரை செந்தமிழ் செல்வன், நியமிக்கப்பட்டுள்ளார். இவரும், கார்த்திக் சார்ந்த நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் தான்.

யார் இந்த கார்த்திக்!



மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கார்த்திக், கோவை மாநகராட்சியில் துணை மேயராக இருந்தவர். அந்த செல்வாக்கில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற அவர், 2016ம் ஆண்டு சிங்காநல்லுார் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2021ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
எனினும், மாவட்ட செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடித்தார். மாநகராட்சி தேர்தலின்போது, தனக்கு ஆகாதவர்களுக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டதாக, கார்த்திக் மீது முன்னணி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.


அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுகவினருடன் ஒட்டி உறவாடியதாகவும், அதன் மூலம் பயன்பெற்றதாகவும் இவர் மீது புகார்கள் இருந்தன. எனினும், அவற்றை கடந்து இவ்வளவு நாட்களாக பதவியில் நீடித்தார். இப்போது எப்படியாவது கோவையில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்ற தலைமையின் முடிவால், பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்போதும் அவரது மனைவி தான், மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவராக பதவியில் இருக்கிறார். அவருக்கு, மேயர் பதவி பெறுவதற்கு கார்த்திக் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement