தங்கம் வென்றார் அனுஷ்கா: உலக துப்பாக்கி சுடுதலில்

புதுடில்லி: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அனுஷ்கா (50 மீ., 'ரைபிள் புரோன்') தங்கம் வென்றார்.
டில்லியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு பைனலில் இந்தியாவின் அனுஷ்கா தோகூர், 621.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான அன்ஷிகா (619.2 புள்ளி), ஆத்யா அகர்வால் (615.9) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இப்பிரிவில் மூன்று பதக்கங்களையும் இந்திய வீராங்கனைகள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தனர்.
ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு பைனலில் இந்தியாவின் தீபேந்திர சிங் ஷெகாவத், 617.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் கன்யான் (616.3) வெண்கலத்தை தட்டிச் சென்றார். சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு தடை இருப்பதால், துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு கொடியின் கீழ் விளையாடும் கமில் நுாரியாக்மெடோவ் (618.9) தங்கம் வென்றார்.
இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கம் வென்ற இந்தியா, முதலிடத்தில் உள்ளது.