பா.ஜ., மூத்த தலைவர் மல்ஹோத்ரா மரணம்

புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவரான விஜய் குமார் மல்ஹோத்ரா, 93, டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

டில்லி பா.ஜ.,வின் முதல் தலைவராக இருந்தவர் விஜய் குமார் மல்ஹோத்ரா. இவர், டில்லியில் இருந்து ஐந்து முறை எம்.பி.,யாகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆகவும் தேர்வானவர். 1999 லோக்சபா தேர்தலில், தெற்கு டில்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை தோற்கடித்து மல்ஹோத்ரா எம்.பி.,யானார்.

மேலும், டில்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2008 சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் டில்லி முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், அப்போது காங்கிரஸ் வென்றதால் ஷீலா தீக்ஷித் முதல்வரானார். வயோதிகம் காரணமான உடல்நலக் கோளாறுகளால் வீட்டில் ஓய்வில் இருந்த மல்ஹோத்ரா, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, டில்லி முதல்வர் ரேகா குப்தா, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'மக்கள் பிரச்னைகளை எளிதில் புரிந்து கொண்ட மல்ஹோத்ரா, தன்னை சிறந்த தலைவராக வேறுபடுத்தி காட்டினார். டில்லியில், பா.ஜ.,வை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்; ஓம் சாந்தி' என, குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, டில்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த மல்ஹோத்ரா உடலுக்கு பிரதமர் மோடி நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Advertisement