சர் கிரீக் பகுதியில் ராணுவ கட்டமைப்பை அதிகரிக்கும் பாக்: எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங்!

ஆமதாபாத்: ''சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்கட்டமைப்பு வசதியை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால் இந்தியா தீர்க்கமான தக்க பதிலடியை கொடுக்கும்'' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த விஜய தசமி விழாவில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது; ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுபவர்கள் எந்த இடத்தில் பதுங்கி இருந்தாலும் அவர்களை அழிக்கும் திறமையை பாதுகாப்பு படையினர் நிரூபித்தனர். இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுபவர்களுக்கு பதிலடி கொடுக்காமல், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தெளிவுப்படுத்தினோம்.
போர் தொடுப்பது…!
பாகிஸ்தானில் கடுமையான சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உறுதி செய்தோம். அதேநேரத்தில் நாங்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தோம். எங்கள் ராணுவ நடவடிக்கையின் நோக்கம் பயங்கரவாதத்திற்கு மட்டும் எதிரானதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நாங்கள் போர் தொடுப்பதை நோக்கமாக கொள்ளவில்லை. அதேநேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்கிறது.
தக்க பதிலடி
சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளை கடந்தும் சர் கிரீக் பகுதியில் எல்லை தொடர்பான பிரச்னையை உருவாக்க முயற்சி நடக்கிறது. பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண இந்தியா பல முறை முயற்சி செய்தது. ஆனால் பாகிஸ்தானின் நோக்கம் தெளிவாக இல்லை.
சர்வதேச எல்லையான சர் கிரீக் அருகே பாகிஸ்தான் ராணுவம் உள்கட்டமைப்பு வசதியையும், பாதுகாப்பையும் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால் இந்தியா தீர்க்கமான தக்க பதிலடியை கொடுக்கும்
கடும் விளைவுகள்
இந்த பகுதிகளை பாதுகாப்பு படையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் ஏதும் அச்சுறுத்தல் கொடுக்க முயற்சித்தால் வரலாற்றையும், புவியியலையும் மாற்றக் கூடிய ஒரு கடும் விளைவை சந்திக்க நேரிடும். 1965ம் ஆண்டு போரில், இந்திய ராணுவம் லாகூரில் சென்று தாக்கும் திறனை வெளிப்படுத்தியது. தற்போது 2025ல் இந்தியாவில் இருந்து சர் கிரீக் பகுதி வழியாக கராச்சிக்கு செல்ல முடியும் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
சர் கிரீக் எங்கே இருக்கிறது?
சர் கிரீக் பகுதி இந்தியாவுக்கு, பாகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள சதுப்பு நிலப்பகுதியாகும். இது 96 கி.மீ., நீளமுள்ள நீர்வழி பாதை. இது குஜராத்தில் உள்ள கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு இடையில் அமைந்துள்ளது.