3வது நாளாக தொடரும் பாக்., அரசுக்கு எதிரான போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் பலி

4

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. போர்களமாக மாறிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாக் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில், அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. அங்கு 3வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் போராட்டக்காரர்களை கலைக்க பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.


பாக் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போர்க்களமாக மாறி இருக்கிறது.

இதனால், அங்கு சந்தைகள், கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்துடன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கங்கள் எழுப்பினர்; பேரணிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். செப்டம்பர் 29ம் தேதி போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இணைய வசதிகள் முற்றிலும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.



பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, 12 சட்டசபை தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும்; மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் என, 38 அம்ச கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


போராட்டத்தை முன்னிட்டு, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய படையினரையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் பாக்., அரசு நிறுத்தியுள்ளது. கடந்த வாரம் கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement