டிரம்ப்பின் பிழையை சுட்டிக்காட்டி ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தில் சிரிப்பலை

12

கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிழையை சுட்டிக்காட்டி ஐரோப்பிய தலைவர்கள் கிண்டலாக பேசி சிரித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.


அர்மீனியா - அசர்பைஜான் இடையே பல ஆண்டுகளாக போர் நிலவி வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து, இருநாட்டு தலைவர்களை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தார்.


இதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெருடன் செய்தியாளரை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இருநாடுகளின் பெயரையும் தவறாக உச்சரித்தார். அர்மீனியாவுக்கு பதிலாக அல்பேனியா என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், அசர் பைஜான் என்று கூறுவதற்கு பதிலாக அபர் பைஜான் என்றார். டிரம்ப்பின் இந்த பேச்சு உலக தலைவர்களிடையே விமர்சனங்களை எழச் செய்தது.

அதோடு, அர்மீனியா - அசர்பைஜான், இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளின் போரை நிறுத்தியதற்காக நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றும், அப்படி கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவை அவமதிக்கும் செயல் என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், போரை நிறுத்திய விவகாரத்தில் தற்பெருமை பேசி வரும் அதிபர் டிரம்ப் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கிண்டலாக பேசி சிரித்துள்ளனர்.


டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த இந்தக் கூட்டத்தில் அல்பேனிய பிரதமர் எடி ரமா, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் ஆகியோர் கலகலப்பாக பேசினர்.


"அல்பேனியா-அசர் பைஜான் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு நீங்கள் எங்களுக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று எடி ரமா கிண்டலாக பேசினார். இதனைக் கேட்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான், மன்னித்து விடுங்கள் என்றார். இதனைக் கேட்டு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலகலவென சிரித்தனர்.


ஏனெனில் அதிபர் போர் நிறுத்தம் செய்து வைத்து அர்மீனியா - அசர்பைஜான் இடையே தான். ஆனால், அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அர்மீனியா என்பதற்கு பதிலாக அல்பேனியா என்று மாற்றி கூறினார். அதைத் தான் ஐரோப்பிய தலைவர்கள் சுட்டிக்காட்டி சிரித்துள்ளனர்.

Advertisement