வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்; 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அவலம்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 6 வனச்சரகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தேனி மாவட்டத்தில் கண்டமனூர், வருஷநாடு, மேகமலை, சின்னமனூர், கம்பம் கிழக்கு, கூடலூர் ஆகிய 6 வனச்சரகங்கள் உள்ளன. இச்சரகங்களில் 100க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றுகின்றனர். வனப்பகுதியில் ரோந்து செல்வது, காட்டுத்தீ ஏற்படும் போது அதனை அணைத்து பரவாமல் கட்டுப்படுத்துவது, மரக் கடத்தல்கள் தடுத்து கண்காணிப்பது, வன விலங்குகள் உயிரிழக்கும் போது அதனை பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்வது, அலுவலக பணிகள் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.
கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக பணியாற்றும் இவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அரசின் சலுகைகள் இன்றி ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில் வனத்துறை முதல் நிலை பட்டியலில் சேர்க்க தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததை கண்டித்து கடந்த மூன்று நாட்களாக பணிகளை புறக்கணித்துள்ளனர்.
தேனி மாவட்ட வேட்டைத்தடுப்பு காவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 2019ம் ஆண்டுக்குப் பின் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நியமனத்திற்கு அனுமதி இல்லை. தேனி மாவட்டம் தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற டிவிஷன்களில் 2019ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் 800 பேரை முதல் நிலை பட்டியலில் சேர்த்து தற்போது அரசு பணி பெற்றுள்ளனர். அவர்களில் தற்போது 280 பேருக்கு மட்டும் முதல் நிலை பட்டியலில் சேர்ப்பது நிலுவையில் உள்ளது.
தேனி மாவட்டத்தில் 2019ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த 82 நபர்களையும் முதல் நிலை பட்டியலில் சேர்க்க வேண்டும். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரு வாரங்களுக்கு முன் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நடவடிக்கை இல்லாததால் தற்போது பணிகளை புறக்கணித்துள்ளோம். வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும்
-
கரூர் சம்பவத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
ஒரே ஒரு காப்பி 60 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச விலை என கின்னஸ் சாதனை பதிவு
-
ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட் கனவு அணியில் விராட் கோலி, பிரெட் லீ, ரோட்ஸ்!
-
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
-
தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்த தீர்ப்பு: வழங்கியவர் நீதிபதி அருண் சுப்பிரமணியன்!