ம.பி., ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழப்பு: இருமல் மருந்துக்கு தடை

சென்னை: மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் இறப்புக்கு காரணமாகக் கூறப்படும் கோல்ட்ரிப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது.
சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், ராஜஸ்தான் சீக்கர் மாவட்டத்தில், இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மத்திய பிரதேசத்தில் ஆறு குழந்தைகளும், ராஜஸ்தானில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது.
இதையடுத்து, மத்திய மருந்து தர கட்டுப்பாடு மைய அதிகாரிகள், குழந்தைகள் குடித்த குடிநீர், இருமல் மருந்து மாதிரிகள், டாக்டர்களின் பரிந்துரை கடிதம் உள்ளிட்டவைகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தைகளின் உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என, தெரியவந்துள்ளது. மேலும், அந்த இருமல் மருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மா' என்ற கம்பெனியில் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் தினேஷ்குமார் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், '' 'சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு கம்பெனி, உங்கள் அதிகார வரம்பிற்குள் இருப்பதால், இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, கூறி இருந்தார்.
இதனால், கோல்ட்ரிப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் செயல்படும் அதன் உற்பத்தி நிறுவனத்திலிருந்து வேறு எங்கும் விநியோகிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடவடிக்கை தொடரும் என மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் துணை இயக்குநர் எஸ். குருபாரதி தெரிவித்தார்.
மேலும்
-
சோனியா விஹாரில் கே.வி.பள்ளி முதல்வர் ரேகா குப்தா தகவல் முதல்வர் ரேகா குப்தா தகவல்
-
கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர் ஆய்வு
-
மாநிலங்களே இருக்கக்கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
-
பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
-
கல்லுாரி மாணவியருக்கு பாலியல் தொல்லை போலி சாமியார் சிறையில் அடைப்பு
-
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி இரண்டு பேர் காயம்