தொழில்மனை வாங்கி உற்பத்தி துவங்காத நிறுவனங்கள் மீது 'சிட்கோ' நடவடிக்கை காரணம் கேட்டு நோட்டீஸ்

சென்னை:தொழில் மனைகளை வாங்கிய இரண்டு ஆண்டுக்குள் ஆலை அமைத்து, உற்பத்தியை துவக்காத நிறுவனங்கள் மீதான நடவடிக்கையை 'சிட்கோ' நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, சாலை, தண்ணீர் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழிற்பேட்டையை, 'சிட்கோ' அமைக்கிறது.
தொழிற்பேட்டையில் மனைகளை வாங்கிய சிலர், ஆலை அமைத்து உற்பத்தியை துவக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது .
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன் வரை, சிட்கோ மனையை வாங்கியவர், இரண்டு ஆண்டுகளுக்குள் தொழில் துவங்கவில்லை எனில் ஆண்டுக்கு, 3,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்த தொகை மிகவும் குறைவு என்பதால் பலர், அதை செலுத்திவிட்டு, தொழில் துவங்காமல் தாமதம் செய்து வந்தனர்.
இதுதொடர்பாக நடத்திய ஆய்வில், நிலத்தின் மதிப்பு உயர்ந்ததும், தொழிலை துவக்கிவிட்டு, மனையை அதிக விலைக்கு விற்று விடலாம் என்ற எண்ணத்துடன் காலி மனையாகவே வைத்திருப்பதாக தெரியவந்தது.
இதனால், இரண்டு ஆண்டுக்குள் உற்பத்தியை துவக்காத நிறுவனத்திற்கு, மனையின் சந்தை விலையில், 8 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை, பல தொழிற்பேட்டைகளில் சரிவர பின்பற்றுவதில்லை.
தமிழகம் முழுதும் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. எனவே, மனைகளை வாங்கியவர்கள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க, இரு ஆண்டுகளுக்குள் தொழில் துவங்காத நிறுவனங்களிடம் சந்தை மதிப்பில், 8 சதவீதம் அபராத வசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, தொழிற்பேட்டைகளின் கிளை மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தொழில் துவங்காத நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலம் முழுதும், 15,542 தொழில்மனைகளுடன் கூடிய,135 தொழிற்பேட்டைகளை சிட்கோ நிர்வகித்து வருகிறது
விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகளை அமைக்கிறது.
மேலும்
-
உயருது உருட்டு உளுந்து
-
ஆசிரியர்கள் வாகனத்தை சுத்தப்படுத்திய மாணவர்கள் வீடியோ பரவியதால் சர்ச்சை
-
குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
-
மருதேரி சாலையை சீரமைக்க கோரிக்கை
-
லாரியில் இருந்து சிதறும் ஜல்லி கற்களால் செய்யூர் - போளூர் சாலையில் விபத்து அபாயம்
-
ரூ.2 கோடி மதிப்பு சொத்து அபகரித்து விற்ற மூவர் கைது