லாரியில் இருந்து சிதறும் ஜல்லி கற்களால் செய்யூர் - போளூர் சாலையில் விபத்து அபாயம்

செய்யூர்:லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லிகற்களால் செய்யூர் - போளூர் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியவெண்மணி, வேட்டூர், சிறுவங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன.
இத்தொழிற்சாலைகளில் இருந்து செய்யூர், மதுராந்தகம் வழியாக செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, லாரிகளில் ஜல்லி கற்கள் மற்றும் 'எம்.சாண்ட்' உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
பெரும்பாலான லாரிகளில், அதிக அளவு பாரம் ஏற்றுவதோடு தார்ப்பாய் மூடாமல் செல்வதால், லாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் மற்றும் 'எம்.சாண்ட்' மணல் சாலையில் சிதறுகின்றன.
இவை, சாலை ஓரம் பரவிக் கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
செய்யூர் பஜார் பகுதியில் செய்யூர் - போளூர் நெடுஞ்சாலையில் சால்ட் ரோடு செல்லும் சாலை சந்திப்பில் அதிக அளவில் ஜல்லிகற்கள் பரவிக் கிடப்பதால்வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்காமல் சறுக்கி விபத்துக்குள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், சாலை ஓரத்தில் பரவியுள்ள ஜல்லிக்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.