தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: 'தமிழகத்தில், மூன்றாண்டுகளில், 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதற்கு, தி.மு.க., அரசே பொறுப்பு' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி, கடந்த 2023ல், தமிழகத்தில் மொத்தம் 19,483 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

தற்கொலையில் மஹாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் வாழ தகுதியற்ற மாநிலமாக, தமிழகம் மாறி வருவதற்கு இதுவே சான்று.

கடந்த 2021ல், 599 பேர்; 2022ல் 738 பேர்; 2023ல் 631 பேர் என, மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், 1,968 விவசாயி கள் தற்கொலை செய்துள்ளனர்.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் இறுதியில், 12,110 கோடி ரூபாய் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்து வந்த தி.மு.க., அரசு அதை செயல்படுத்தவில்லை.

தி.மு.க., ஆட்சியில், ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை. நெல்லுக்கான ஊக்கத்தொகை, கடந்த ஐந்தாண்டுகளில், 81 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் சேதமடையும் பயிர்களுக்கு, குறைந்தபட்ச இழப்பீடு கூட வழங்கப்படுவதில்லை.

இவை தான் விவசாயிகளை தற்கொலைக்கு துாண்டுகின்றன. இதற்கு காரணமான தி.மு.க., அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement