ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

4


ஜெருசலேம்: ''ஹமாஸ் ஆயுதமற்றதாக மாற்றப்படும். காசா ராணுவமயமாக்கப்படும். இந்த இலக்கை நிச்சயம் அடைவோம்'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி ஒப்பந்தத்தில், ஒரு சிலவற்றை மட்டும் ஏற்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. மீதமுள்ளவை குறித்து பேச்சு நடத்தலாம் என்று கூறியுள்ளது.


இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நாம் ஒரு மிகப் பெரிய சாதனையின் விளிம்பில் இருக்கிறோம். இது இன்னும் இறுதியானது அல்ல; நாங்கள் அதில் விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறோம். வரும் நாட்களில் அனைத்து பிணைக்கைதிகளும் ஒரே நேரத்தில் திரும்பி வருவதை உங்களுக்கு அறிவிக்க முடியும் என்று நம்புகிறேன்.



காசா ராணுவமயமாக்கப்படும். இந்த இலக்கை நிச்சயம் அடைவோம். இஸ்ரேல் படையினரை காசாவில் இருந்து முழுவதுமாக திரும்ப பெற மாட்டோம். தற்போது காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து நம்மிடமே இருக்கும். ஹமாஸ் அமைப்பு ராஜதந்திர ரீதியாகவோ அல்லது வேறு வழியிலோ, ஆயுதமற்றதாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement