தாழ்வாக செல்லும் மின் கம்பி சித்தாலப்பாக்கத்தில் ஆபத்து

சித்தாலப்பாக்கம்: பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, யாதவா தெருவில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இத்தெருக்களில், சில மாதங்களுக்கு முன், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அச்சாலையின் மட்டம் உயர்ந்து, அத்தெருக்களில் உள்ள மின் கம்பங்களின் உயரம் குறைந்துள்ளது.

இதனால், மின் கம்பிகள் மிக தாழ்வாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில் செல்கின்றன. அதனால், அப்பகுதியில் மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, சாலையின் மட்டத்திற்கேற்ப, மின் கம்பங்களை உயர்த்தி அமைக்கவும், மின் கம்பிகளை சீரமைக்கவும் கோரி, மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, பெரும் அசம்பாவிதம் நிகழும் முன், இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை உயர்த்தி அமைப்பதோடு, தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளையும் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement