'வரப்புயர' திட்டத்தில் ஏரிக்கரை மேம்பாடு

மேடவாக்கம்: மேடவாக்கம் பெரிய ஏரிக்கரையில், நீர் மேலாண்மையை காக்கும், 'வரப்புயர' திட்டத்தில் முதல் கட்டமாக அமைக்கப்பட்ட நடைபாதையை, நேற்று காலை 10:00 மணிக்கு, சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்.

இந்த திட்டம், 'பிளக்ஸ் பவுண்டேசன்' நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில், 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேடவாக்கம் குடியிருப்பு நலச்சங்கங்களின் முன்னெடுப்பின் கீழ் துவங்கப்பட்டு, முதல் கட்ட பணி முடிந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியாக, ஏரிக்கரையை அழகுபடுத்தி, பசுமையான நடைபாதையை ஏரிக்கரையில் உருவாக்குவதே இதன் நோக்கம்.

இதில், 'வீல் சேர்' பயனாளிகளுக்கான சாய்வுதளம், மூத்த குடிமக்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சி வசதி, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை விளக்கும் பலகைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்டங்களில், நடைபாதை முழுதும் மரக்கன்றுகள் நட்டு பசுமைப் பரப்பை விரிவாக்குதல், சோலார் விளக்குகள் அமைத்தல் மற்றும் எல்லா வயதினருக்கும் உடற்பயிற்சி, ஓய்வு பகுதிகளை உருவாக்க உள்ளதாக, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement