பதவியேற்ற ஒரே மாதத்திலேயே பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா

பாரிஸ் : பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகுர்னு, பதவியேற்ற சில வாரங்களிலும் , அமைச்சரவையை நியமித்த சில மணி நேரங்களிலும் பதவி விலகியுள்ளார்.


ஐரோப்பிய நாடான பிரான்சின் பிரதமராக இருந்த பிரான்சுவா பேய்ரூ தாக்கல் செய்த பட்ஜெட், பல தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்தது.இதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவர் தோல்வி அடைந்ததை அடுத்து ஆட்சி கவிழ்ந்தது. கடந்த செப்., 9ல் பிரான்சின் 47வது பிரதமராக ராணுவ அமைச்சராக இருந்த செபஸ்டியன் லெகுர்னு பதவியேற்றார்.


கடந்த சில வாரங்களாக நடந்த ஆலோசனைக்குப் பின், நேற்று அவர், அமைச்சரவையை நியமித்தார். மேலும் அதன் முதல் கூட்டத்தை நேற்று பிற்பகல் நடத்தத் திட்டமிட்டார். ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் சிக்கன பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு பிளவுப்பட்ட பார்லிமென்டின் ஒப்புதலைப் பெறும் கடினமான சூழ்நிலையை செபஸ்டியன் லெகுர்னு எதிர்கொண்டார்.


இந்நிலையில், அவர் தன் பதவியை இன்று ராஜினாமா செய்தார். பிரான்சின் கடன் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், அரசியல் நெருக்கடி காரணமாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் இமானுவேல் மேக்ரானும் ஏற்றுக் கொண்டுள்ளார்.


பிரான்சின் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து, அதிபர் மேக்ரான் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


அதிபர் மேக்ரான் ஆட்சியில் ஏழாவது முறையாக பிரதமர் மாறியுள்ளார். மேலும் ஒரே ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நான்காவது பிரதமராக லெகுர்னு இருந்தார். அவரது அரசே பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் ஆட்சி செய்த அரசாகக் கருதப்படுகிறது. பதவியேற்ற 27 நாட்களில் அவர் ராஜினாமா செய்திருப்பது பிரான்ஸ் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement