விதிமீறிய 178 வாகனங்கள் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கடந்த செப்., மாதத்தில், விதிமீறிய 178 வாகனங்களை பிடித்து, 29.93 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதில், கடந்த செப்டம்பரில் மட்டும், விதிமீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதி சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என, விதிமீறி இயக்கிய 178 வாகனங்கள் கண்டறியப்பட்டன.
இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தது, வாகனத்தை சிறை பிடித்து அபராதம் வசூலித்தது என, ஒரே மாதத்தில் மொத்தமாக 29.93 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
விதியை மீறும் வாகனங்கள் கண்காணிப்பு தொடரும் என, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.