மாண்டுகன்னீஸ்வரர் கோவில் சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாண்டுகன்னீஸ்வரர் கோவில் சுவரில் செடிகள் வளர்ந்து உள்ளதால், வலுவிழக்கும் அபாய நிலையில் உள்ளது.

காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவிற்கும், ஒ.பி.குளம் தெருவிற்கும் இடையே உள்ள தெருவில், மாண்டுகன்னீஸ் வரர் கோவில் உள்ளது.

இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், 60 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.

இக்கோவில் முறையான பராமரிப்பு இல்லாததால் கோவில் சுவர்களில் செடிகள் வளர்ந்தும், நந்திமண்டபம், மூலவர் விமானம், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்டவை சிதிலமடைந்துள்ளதால், வலுவிழக்கும் நிலையில் உள்ளது.

எனவே, இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாண்டுகன்னீஸ்வரர் கோவில் திருப்பணி துவக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் விடப்பட்டு கோவிலில் திருப்பணி துவக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement