நோயாளிகள் மூலம் மறுவாழ்வு பெற்றோர் 168 பேர்

1

மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவின் கீழ் 2021 டிசம்பரில் எலும்பு வங்கி துவங்கப்பட்டது.

இடுப்பெலும்பு முறிவு ஏற்படும் நோயாளிகளின் இடுப்பு பந்து அகற்றப்பட்டு செயற்கை பந்து மூட்டு பொருத்தப்படுகிறது. அகற்றப்பட்ட பந்து மூட்டு பகுதியை சுத்தம் செய்து பெங்களூருவில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பி 'காமா' கதிரியக்கம் மூலம் கிருமிநீக்கம் செய்து எலும்பு வங்கியில் சேகரிக்கப்படுகிறது.

இந்த எலும்புகளை புற்றுநோயாளிகள், விபத்தில் அடிபட்டவர்களுக்கு (அல்லோகிராப்ட் முறை) பொருத்துவது 'லைவ் டோனர்' முறை.

இந்த 'லைவ் டோனர்'களிடம் இருந்து அதிகமாகவும், மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்து குறைவாகவும் எலும்பு தானம் பெறுகிறோம் என்கின்றனர் டீன் அருள் சுந்தரேஷ்குமார், எலும்பு வங்கியின் இணைப் பேராசிரியர் திருமலை முருகன். அவர்கள் கூறியதாவது:

'லைவ் டோனர்' முறையில் 2022 முதல் தற்போது வரை 168 பேரிடம் 'பந்து மூட்டு' அகற்றப்பட்டு பிற நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. மூளைச்சாவு நோயாளியிடம் இருந்து கை, கால், தொடை எலும்புகளையும் தானமாக பெறலாம் என்றாலும் விழிப்புணர்வு குறைவால் 2022 முதல் தற்போது வரை 12 பேரிடம் மட்டுமே எலும்புகள் பெறப்பட்டுள்ளது.

தேவை அதிகம் தென் மாவட்டங்களில் விபத்தில் அடிபடும் நோயாளிகள் இங்குதான் அனுமதிக்கப்படுகின்றனர். விபத்தில் நோயாளிகளின் எலும்புகள் நொறுங்கினால் அவர்களிடம் இருந்தே சிறிதளவு எலும்புகளை எடுத்து (ஆட்டோகிராப்ட்) அறுவை சிகிச்சை செய்கிறோம். ஏற்கனவே விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அறுவை சிகிச்சையோடு சில இடங்களில் ஊனம் ஏற்படக்கூடும்.

அதேபோல புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எலும்புகள் அரிக்கப்பட்ட நிலையில் எலும்பு மாற்றம் செய்ய வேண்டும். ரத்ததானத்தைப் போல எலும்பு தானத்திற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மற்ற உறுப்புகளைப் போலவே எலும்புகளும் மற்றவர்களை வாழ வைக்கிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.

Advertisement