நடிகர்கள் வீடுகளில் ஆதாரங்கள் சிக்கின: அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை : 'அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சகலக்கல் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்திய சோதனையில், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது' என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூடான் ராணுவ அதிகாரிகளால் ஏலம் விடப்பட்ட, 'லேண்ட் க்ரூசர், லேண்ட் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ்' உள்ளிட்ட சொகுசு கார்களை, மர்ம நபர்கள் வாங்கி, அதை நம் நாட்டிற்கு கடத்தி வந்துள்ளனர். அதை புதிய வாகனம் போல மெருகேற்றி, இந்திய ராணுவம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் துாதரக முத்திரையை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயார் செய்து மறுபதிவு செய்துள்ளனர். இந்த கார்களை, கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகர் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சகலக்கல் மற்றும் தொழில் அதிபர்கள் வாங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து, 35 கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, கார் கடத்தல் விவகாரத்தில், அன்னிய செலவாணி மோசடியில் ஈடுபட்டதாக, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக, தமிழகம் மற்றும் கேரளாவில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என, 17 இடங்களில் கொச்சி மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: வெளிநாட்டில் இருந்து, சட்டவிரோதமாக சொகுசு கார்களை இறக்குமதி செய்தது மற்றும் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பணம் அனுப்பியது தொடர்பாக, தமிழகம் மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சோதனையில், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆதார ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, டிஜிட்டல் கருவிகள், வாகனப் பதிவுக்கு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் மற்றும் பணம் செலுத்தியற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
திருமாவளவன் வாகனம் மோதல் விவகாரம் அண்ணாமலை கேள்வி
-
அ.தி.மு.க., பிரமுகருக்கு மீண்டும் சம்மன்
-
லோக்சபா தேர்தல் வழக்கு கோர்ட்டில் பன்னீர் ஆஜர்
-
த.வெ.க., -- -மா.செ., மதியழகனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
-
பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்., தலைவர்கள் செல்வர் அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு
-
அ.தி.மு.க., பிரசாரத்தில் த.வெ.க., கொடி 'பிள்ளையார் சுழி' என பழனிசாமி பெருமிதம்