சொக்கர்முடி மலையில் பூத்த நீலக்குறிஞ்சி பூக்கள்

மூணாறு:மூணாறு அருகே சொக்கர்முடி மலையில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன.

கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோடு பகுதியில் சொக்கர்முடி மலை உள்ளது. அங்கு 2013ல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தவாரவியல் பெயர் கொண்ட நீலக் குறிஞ்சி பூக்கள் பூத்தன. அப்போது மலை முழுதும் நீல வர்ணம் பூசியது போன்று காட்சியளித்தது.

இந்நிலையில் சொக்கர்முடி மலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன. வரும் நாட்களில் மலை முழுதும் பூக்கள் பூக்க வாய்ப்புள்ளது.

மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்கா, மறையூர் ஆகிய பகுதிகளில் 2018 ஆகஸ்ட்டில் நீலக் குறிஞ்சி பூக்கள் பூத்தன. அவற்றை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் விரிவான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது கன மழை பெய்து பேரழிவு ஏற்பட்டதால் பயணிகள் வர இயலாத நிலையில் பூக்களும் சரிவர பூக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்ட பயணிகள் தற்போது சொக்கர்முடி மலையில் குறிஞ்சி பூக்களை ரசிக்கலாம்.

Advertisement