கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தவெக, இதற்காக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளது.
சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதை உடனடியாக விசாரிக்கவும் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.மனுவில், கரூர் சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம், சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளது. இதைத் தொடர்ந்து பிற மனுக்களுடன் சேர்த்து தவெக மனுவையும் இணைத்து இன்று விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி கவாய் தெரிவித்து இருந்தார்.
தவெகவை போன்று, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சந்திரா என்பவரின் கணவரும், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். சிறப்பு விசாரணைக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும், மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் ஒருவரின் தந்தையும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுக்களை , நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று (அக்.10) விசாரணை நடத்தியது.
தவெக வாதம்
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆஜராகி உள்ளனர். தவெக சார்பில் வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
அவர்கள், ''போலீசார் அறிவுறுத்தலின் படியே கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார். விஜய் இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும் என போலீசார் தெரிவித்தனர். விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது'' என தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விதிவிலக்கான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணை தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிறுவனின் தந்தை தரப்பில், கூட்ட நெரிசலுக்கு காவல்துறையின் தோல்வியே காரணம். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இடையூறாக இருக்கும் என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கம் கூறியது. அந்த இடத்தில் தான் விஜய் கூட்டத்துக்கு செப்டம்பரில் அனுமதி தரப்பட்டது. கரூர் பிரசாரத்தில் ரவுடிகள் நுழைந்தனர். காவல்துறை விசாரணையில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை இல்லை. உண்மை வெளிவர சிபிஐ விசாரணை தேவை என வாதிடப்பட்டது.
நீதிபதிகள் கூறுகையில், '' சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள் வராத வழக்கை விசாரித்தது ஏன்?. ஒரு கோரிக்கையை முன்வைத்தால் மற்றொரு கோரிக்கை மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. '' எனக் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.











மேலும்
-
ஹமாஸ் பிடியில் இருக்கும் ஹிந்து இளைஞர்: விரைவில் விடுதலையாக வாய்ப்பு
-
ஆந்திராவில் ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்
-
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை அடைய விண்வெளி துறை முக்கியம்!
-
ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரூ.15,000 லஞ்சம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் கைது
-
இந்திய மண்ணில் இருந்து பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கன் அமைச்சர்!
-
நோபல் பரிசு பெறப்போகும் மரியா கொரினா மச்சாதோ