நோபல் பரிசு பெறப்போகும் மரியா கொரினா மச்சாதோ

நோபல் பரிசு பெறப்போகும் போது அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் “நான் நிறைய போர்களை நிறுத்தினேன், எனவே எனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்” என பலமுறை கூறியதாலும், சிலரை விட்டு பேசவைத்ததாலும், பரிசு யாருக்கு வழங்கப்படுமோ என்ற ஆர்வத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. கடைசியில் ஆசைப்பட்டவர் பரிசு பெற முடியவில்லை. அதற்குப் பதிலாக, வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாதோவுக்கு 2025ஆம் ஆண்டு நோபல் அமைதி பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு கமிட்டி கூறுகையில், “அவர் உயிருக்கு ஆபத்து இருந்தும் தன் நாட்டிலேயே இருந்து நெறிமுறையுடனும் அமைதியுடனும் ஜனநாயகத்துக்காக போராடியுள்ளார்.”என்று குறிப்பிட்டுள்ளது.
மரியா கொரினா மச்சாதோ 1967 அக்டோபர் 7 அன்று காரகஸ், வெனிசுலாவில் பிறந்தார். (வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ளது.தலைநகர் கார்கஸ்,எண்ணெய் வளம் மிகுந்த நாடு,பேசும் மொழி ஸ்பானிஷ் ஆகும்.பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள்.) அவரது தந்தை தொழிலதிபர்; தாய் சமூகப்பணியாளர். சிறு வயதிலேயே அரசியல் விவாதங்கள், சுதந்திரம், குடிமக்கள் உரிமைகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டினார். தொழில்நுட்பப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்; பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் நிர்வாக பயிற்சி பெற்றார்.
2000-களின் தொடக்கத்தில் ஹூகோ சாவேஸ் தலைமையிலான மையப்படுத்தப்பட்ட அரசுக்கு எதிராக மக்கள் இயக்கங்களில் இணைந்தார். அவர் நிறுவிய சுமேட் என்ற அமைப்பு தேர்தலின் வெளிப்படைத்தன்மைக்காக போராடியது. இந்தச் செயற்பாடுகளின் காரணமாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் மற்றும் தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2011-இல் தேசிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசை கடுமையாக விமர்சித்தவர்; பேச்சு சுதந்திரம் மற்றும் மக்களாட்சி பாதுகாப்பு குறித்து வெளிப்படையாக பேசினார்.
2012-இல் அவர் 'வென்டே வெனிசுலா' என்ற புதிய எதிர்க்கட்சியை நிறுவினார். இந்தக் கட்சி மக்கள் உரிமைகள், பொருளாதார சுதந்திரம், அரசின் ஊழலுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றை முன்னெடுத்தது. மச்சாதோவின் அரசியல் பாணி வெறும் எதிர்ப்பு அல்ல; அது மாற்றத்தை நோக்கிய அமைதியான போராட்டமாகும். அவர் வன்முறையற்ற குடிமக்கள் இயக்கத்தின் ஆதரவாளர்.
2014 முதல் மச்சாதோ அரசாங்கத்தால் பலமுறை கைது செய்யப்பட்டார். அவரது தேர்தல் தகுதி நீக்கப்பட்டு, “தேச துரோகி” குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மரியா கொரினா 1990ஆம் ஆண்டு ரிகார்டோ சோசா பிராங்கருடன் திருமணமானார். இவர்களுக்கு ஆனா கொரினா, ரிகார்டோ மற்றும் ஹென்றி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர், அரசியல் சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் வெனிசுவேலாவை விட்டு வெளியேறினார். அவரது மூன்று பிள்ளைகளும் பாதுகாப்பு காரணமாக வெளிநாட்டில் வசிக்கின்றனர் மரியா கொரினாவும் உள்நாட்டில் இருப்பதும் உலாவுவதும் ஆபத்து என்று எச்சரித்தபோதும் அவர் நாட்டை விட்டு வெளியேறவில்லை. “என் மக்கள் துன்பப்படும்போது, நான் வெளிநாட்டில் பாதுகாப்பாக இருக்க முடியாது” என்றார் அவர், போராட்டத்தை தெருக்களில் தொடர்ந்தார். இந்த போராட்ட பாணி காரணமாகவும், அமைதியான முறையில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க போராடுவதாலும் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு, மரியா கொரினா மச்சாதோ ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, நம்பிக்கையின் சின்னம் என்று பல நாடுகள் பாராட்டி வருகின்றன. “இந்த பரிசு வெனிசுவேலா மக்களுக்கு ஒரு நம்பிக்கைக் குரல்” எனவும் கூறப்பட்டது. பெரும்பான்மையான சர்வதேச ஊடகங்கள் இதை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயகத்தின் வெற்றி எனவும் வர்ணிக்கின்றன.
எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா, நீண்டகால அதிகார மையப்படுத்தப்பட்ட ஆட்சியால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்கள் உணவு, மருந்து பற்றாக்குறை, குடியேற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்நிலையில், மச்சாதோவின் அமைதியான ஜனநாயகப் போராட்டம் மக்களுக்குள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிசின் மூலம்; வெனிசுவேலா மக்களின் துயரங்களையும், அவர்களின் உறுதியையும் உலகம் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
அமைதி என்பது அமைதியாக இருப்பதல்ல. அமைதியை நிலைநாட்ட முற்படவேண்டும் அதுவே மரியா கொரினா
— எல். முருகராஜ்


மேலும்
-
உருக்குலைந்த காசாவை இந்தியா தான் மறுகட்டமைக்க வேண்டும்; பாலஸ்தீன தூதர் வேண்டுகோள்
-
சட்டவிரோத ஊடுருவல் என்பது தேசிய பிரச்னை; சொல்கிறார் அமித்ஷா
-
உதயநிதிக்கு அரசியல் தெரியாது: இபிஎஸ் பதிலடி
-
3 குழந்தைகளை கொன்ற தந்தை போலீசில் சரண்
-
உண்மையை வெளியே சொல்வோம்: ஆதவ் அர்ஜூனா உறுதி
-
ஹமாஸ் பிடியில் இருக்கும் ஹிந்து இளைஞர்: விரைவில் விடுதலையாக வாய்ப்பு