உண்மையை வெளியே சொல்வோம்: ஆதவ் அர்ஜூனா உறுதி

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் கண்டிப்பாக வெளியே சொல்வோம் என தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகி நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனந்த் 2வது முறையாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இதற்கு மத்தியில் ஆதவ் அர்ஜூனா டில்லி சென்றார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுக்காக வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நிருபர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா கூறியதாவது: நமது வீட்டில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் போது 16 நாள் துக்கம் அனுசரித்து வலியோடு இருப்போம். கட்சித் தலைவர், கட்சி, தோழர்களும், எங்கள் குடும்பத்தில், எங்கள் மக்கள், உறவுகளை இழந்து 16 நாள் துக்கத்தில் உள்ளனர். 16 நாள் காரியம் முடியும் வரை யாரும் பேச மாட்டோம். அந்த அளவுக்கு மிகுந்த வலியோடு இருக்கிறோம். எங்கள் வலிமிகுந்த நாட்களோடு 41 பேரின் குடும்பத்தோடு, அவர்களின் வலியோடு கடந்து கொண்டுள்ளோம்.
16 நாள் காரியம் முடியும் வரை விஜயின் முடிவும் சரி, எங்களின் முடிவும் சரி, எந்த அரசியலோ எந்த விதமான அவதூறுகளோ, தவறான செய்திகளோ பரப்பப்படும் போது பதில் கொடுக்காமல் எங்கள் மக்களோடு இருக்கிறோம். 16 நாள் காரியம் முடிந்தவுடன் என்ன உண்மைகளோ அதனை கண்டிப்பாக சொல்வோம். கட்சி மீது அபாண்டமான, பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி எங்கள் நிர்வாகிகளை கைது செய்யக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, கட்சியை முடக்க நினைக்கும்போது நீதித்துறையை நாடி உண்மையை வெளியே கொண்டு வருவதற்கான சட்டப்போராட்டத்தை துவக்கியுள்ளோம்.
வலியோடு இருக்கும் மக்களை சந்திப்பதற்கான திட்டங்களை உருவாக்கிக்கொண்டு உள்ளோம். 16ம் நாள் காரியம் முடிந்த உடன் பேசுவோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை சாமானிய மனிதராக நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். உண்மை வெளியே வரும். கட்சியின் மாவட்ட செயலாளர்கள், சட்டத்துக்கு அப்பாற்பட்டு கைது செய்யப்படுகின்றனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
