3 குழந்தைகளை கொன்ற தந்தை போலீசில் சரண்

தஞ்சாவூர்: மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில், 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(38). ஓட்டலில் சர்வராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நித்யா(35). இவர்களுக்கு ஓவியா(12), கீர்த்தி(8), ஈஸ்வரன்(5) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
நித்யாவுக்கு சமூக வலைதளம் மூலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன், பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சென்று விட்டார். இதனால், மதுபோதைக்கு அடிமையான வினோத்குமார், குழந்தைகளை வெறுத்து அவர்களை அடிக்கடி திட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குடிபோதையில் வீட்டிற்கு வந்த வினோத் குமார், தனது மூன்று குழந்தைகளையும், அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். சம்பவம் குறித்து மதுக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.