உதயநிதிக்கு அரசியல் தெரியாது: இபிஎஸ் பதிலடி

3

ஈரோடு : அதிமுக கட்சி அலுவலகம் அமித்ஷா வீட்டில் இயங்குகிறது என சொல்லும் துணை முதல்வர் உதயநிதிக்கு அரசியல் தெரிய வாய்ப்பு இல்லை.தெரிந்திருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டார்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.


மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இபிஎஸ் பேசியதாவது:தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்கிறார் முதல்வர். எப்போதோ தலைகுனிந்து விட்டது. உங்கள் கட்சிக்காரர் செய்த 2ஜி ஊழல் வெளி வந்தபோதே தமிழகம் தலைகுனிந்துவிட்டது. திமுக ஆட்சியில் இருந்தும் எதுவுமே செய்ய முடியவில்லை, மக்கள்தான் ஏமாற்றம் அடைந்துவிட்டனர், ஓட்டுப்போட்ட மக்களை மறந்த கட்சி திமுக.


அதிமுக ஆட்சி கடனில் தத்தளிப்பதாக ஸ்டாலின் சொன்னார். அதிமுக ஆட்சியில் சாலை, பாலம், குடிமராமத்து, கடன் தள்ளுபடி என பல திட்டங்கள் கொடுத்தோம், திமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் இல்லை ஆனால் கடன் மட்டும் வாங்குகின்றனர். டிஜிபி பட்டியலை மத்திய அரசு அனுப்பியும் இன்னும் திமுக அரசு நியமிக்கவில்லை, எப்படி சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்? இவர்களுக்கு யார் வேண்டியவரோ, அவரது பெயர் வரும்வரை காத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி டிஜிபி நியமனம் இருக்க வேண்டும் அதையும் இந்த அரசு பின்பற்றவில்லை.

அதிமுக கட்சி அலுவலகம் அமித் ஷா வீட்டில் இயங்குகிறது என்று துணை முதல்வர் உதயநிதி பேசியிருக்கிறார். ராயப்பேட்டையில் தான் அதிமுக அலுவலகம் இருக்கிறது. நீங்களும் உங்க அப்பாவும் திட்டம் போட்டீர்கள். அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்குவதற்குத் திட்டம் போட்டீர்கள். சில பேர் தூண்டுதலின்பேரில் அடித்து நொறுக்கினார்கள். அதை சாக்காக வைத்து அலுவலகத்துக்கு சீல் வைத்தீர்கள். ஆனால், அந்த சீலை அதிமுக உடைத்தெறிந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கருணாநிதி காலத்தில் திமுக இரண்டாக உடைந்தது, கருணாநிதி ஒருபக்கம், வைகோ ஒருபக்கம். அப்போது அந்த கட்சியை கைப்பற்ற முயற்சித்தனர்,


அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்த கட்சி அதிமுக. மறந்துவிடாதீர்கள், உங்களைப்போல எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணம் இல்லை, சக்கரம் சுழல்கிறது, கீழே உள்ள சக்கரம் மேலே வரும். அதிமுக ஆட்சி வந்ததும் பதிலடி கொடுப்போம். உதயநிதிக்கு அரசியல் தெரிய வாய்ப்பே இல்லை, அப்படி தெரிந்திருந்தால் இப்படி பேசமாட்டார்.


பிரதமரை எத்தனை முறை தமிழகத்துக்கு அழைத்து வந்தீர்கள். உங்கள் மீது நடவடிக்கை பாயக்கூடாது என்பதற்காக நடித்த நாடகம் எல்லாம் வெளுத்துவிட்டது. கேலோ இந்தியா விழாவுக்கு பிரதமரை அழைத்து வந்து உதயநிதி நடத்தினார். அப்போது அவர் நல்ல பிஎம். அதேபோல் செஸ் ஒலிம்பியாட் நடத்த வரும்போது நல்ல பி.எம். கலைவாணர் அரங்கில் மத்திய அரசு திட்டம் நடத்தியபோது நல்ல பிஎம், இப்போது தேர்தல் வந்தால் மட்டும் மோசமான பிஎம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement