சட்டவிரோத ஊடுருவல் என்பது தேசிய பிரச்னை; சொல்கிறார் அமித்ஷா

1

புதுடில்லி: 'சட்டவிரோத ஊடுருவலையும், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தையும், அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது. இது தேசிய பிரச்சனை,' என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்துக்களின் மக்கள் தொகை 4.5 சதவீதம் குறைந்துள்ளது. இது பிறப்பு விகிதத்தின் காரணமாக நடக்கவில்லை. ஊடுருவலின் காரணமாகத் தான் இது நடந்துள்ளது.

மதத்தின் அடிப்படையிலேயே நாடுகள் பிரிக்கப்பட்டன. இந்தியாவின் இருபுறமும் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இந்த இரு பக்கங்களில் இருந்தும் ஊடுருவல்கள் நடந்தன. இதன் விளைவாக மக்கள்தொகையில் மாற்றம் ஏற்பட்டது.

ஊடுருவல்காரர்களுக்கும், அகதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்துள்ளது. அவர்களில் பலர் இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ளனர். அதேபோல, இந்தியாவில் அதிகரித்த முஸ்லிம் மக்கள் தொகை பிறப்பு விகிதத்தின் காரணமாக அல்ல. ஊடுருவியதன் காரணமாகத்தான்.

வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்களை சேர்ப்பது என்பது அரசியலமைப்பு ஆன்மாவை மாசுபடுத்துவது போன்றது. வாக்களிக்கும் உரிமை நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

சட்டவிரோத ஊடுருவலையும், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தையும், அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது. இது தேசிய பிரச்னை ஆகும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். ஏனெனில் தங்களின் ஓட்டு வங்கி பறிபோவதாகக் கூறுகின்றனர். ஆனால், வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் பணியாகும். அதில் உங்களுக்கு பிரச்னை இருந்தால், நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம். என்றார்.

Advertisement