மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று கூறிவிட்டு, 2023ம் ஆண்டு வரை கிடப்பில் போட்டது ஏன்? 30 மாதங்கள் வழங்காமல், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கியது ஏன்? 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், சில மாதங்களில் மீதமுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி மீண்டும் மீண்டும் தமிழக மகளிரை ஏமாற்ற முயற்சிப்பது ஏன்?
மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைத் தொகையைப் பெற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கால்கடுக்க நின்று மனு அளித்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத திமுக அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா? ஆட்சி அரியணை ஏறும் முன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் "தகுதியற்றவர்கள்" என்று சிலரை முத்திரை குத்துவது தான் திராவிட மாடல் சமத்துவமா?
இத்திட்டத்தின் பயனாளிகளை அநாகரீகமாக விமர்சித்து திமுகவினர் புளகாங்கிதம் அடையும் வேளையில், இது உண்மையிலேயே மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? சரி, தங்கள் கணக்குப்படி, தகுதியுள்ளவர்கள் என்று வகைப் படுத்தப்பட்ட மகளிருக்கு 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்காமல் விட்ட உரிமைத் தொகையான ரூ.30,000 கடனை எப்போது தான் அடைப்பீர்கள்?
போதும் போதும் முதல்வரே! ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று கடந்த நான்காண்டுகளில் பல்லாயிரம் முறை ஏமாற்றிய உங்களை இனி ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.




மேலும்
-
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு; அக்.13ல் தீர்ப்பளிக்கிறது சுப்ரீம்கோர்ட்
-
மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்து விடும்; கலைமாமணி விருது வழங்கி முதல்வர் பேச்சு
-
இந்தியா வருகிறார் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்; இவர் யார் தெரியுமா?
-
ஆப்கன் அமைச்சர் நிருபர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
கலக்கும் ஜடேஜா… திணறும் வெஸ்ட் இண்டீஸ்; 2வது டெஸ்டிலும் இந்தியா ஆதிக்கம்
-
ஜம்மு காஷ்மீரில் மாயமான இரு ராணுவ கமாண்டோக்கள் சடலமாக மீட்பு