ஆப்கன் அமைச்சர் நிருபர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடில்லி; ஆப்கன் வெளியுறவு அமைச்சர் டில்லியில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் எந்த பங்கும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தலைநகர் டில்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. அவர் நேற்றைய தினம், டில்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் நிருபர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே நிருபர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இந் நிலையில், இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

நேற்றைய ஆப்கன் வெளியுறவு அமைச்சர் டில்லியில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் பங்கு எதுவும் இல்லை. அந்த நிகழ்வு தூதரகத்தின் கட்டுப்பாட்டில் நடந்தது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக பெண் நிருபர்கள் பங்களிப்பு இல்லாத நிருபர்கள் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல், திரிணமுல் எம்பி மஹூவா மொய்தரா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களையும் எழுப்பி இருந்தனர்.

Advertisement