தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட 15 சிறப்பு ரயில்களும் 'ஹவுஸ் புல்'

சென்னை : தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட, 15 சிறப்பு ரயில்களிலும், டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில், தத்காலில் டிக்கெட் எடுக்க பயணியர் காத்திருக்கின்றனர்.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு, 15 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன.

இவற்றில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில், டிக் கெட்டுகள் விற்று தீர்ந்தன. பெரும்பாலான ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை, 100ஐ தாண்டியுள்ளது.

வழக்கமான ரயில் மற்றும் சிறப்பு ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணியர், அடுத்தது தத்கால் முறையில் டிக்கெட் எடுக்க காத்திருக்கின்றனர்.

இதுகுறி த்து, பயணியர் சிலர் கூறுகையில், 'நீண்ட துார பயணத்துக்கு ரயில் போக்குவரத்து வசதியாக உள்ளது. 'கட்டணமும் நியாயமாக இருப்பதால், நடுத்தர குடும்பத்தினர் ஊருக்கு செல்ல பயனுள்ளதாக இருக்கிறது.

'ஆனால், ரயில்கள் போதுமான அளவு இல்லை. பயணியர் நலன் கருதி, கூடுதல் சிறப்பு ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'தெற்கு ரயில்வே சார்பில், தீபாவளிக்கு, 15 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பயணியர் தேவை அதிகமாக இருப்பதால், கூடுதலாக ஐந்து சிறப்பு ரயில்களை இயக்க ஆலோசனை நடந்து வருகிறது.

இதற்காக, ரயில் பெட்டிகள் இணைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளோம். இப்பணிகள் முடிந்ததும், கூடுதல் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்' என்றனர்.

Advertisement