'டிஜிட்டல்' ஆயுள் சான்று பெற ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்

புதுடில்லி : 'ஓய்வூதியதாரர்கள் பயன் பெறும் வகையில், நவ., 1 முதல் 30ம் தேதி வரை, நாடு தழுவிய அளவில், 'டிஜிட்டல்' ஆயுள் சான்றிதழுக்கான சிறப்பு முகாம் நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள், தங்களுக்கான ஓய்வூதியத்தை தொடர, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இது தொடர்பாக அவர்களுக்கு உதவும் வகையில், சிறப்பு முகாம்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:



நாடு முழுதும், 2,000 மாவட்டங்களில் நவ., 1 முதல் 30 வரை, 'டிஜிட்டல்' ஆயுள் சான்றிதழுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி, ஓய்வூதியதாரர் நல சங்கங்கள், தொலைதொடர்பு, ரயில்வே, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ராணுவ கணக்குகளுக்கான கட்டுப்பாட்டாளர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடக்கிறது.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத் துறை சார்பில் நான்காவது முறையாக இது நடத்தப் படுகிறது.

இந்த ஆண்டு, 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி மூலம் இந்த முகாமை நடத்துவதால், 1.8 லட்சம் தபால் ஊழியர்கள் இந்த பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதியோர் வசதிக்காக அவர்களது வீடுகளுக்கே சென்று உதவி செய்வர்.

உடல் நலம் பாதித்த முதியோருக்காக மருத்துவமனைகளுக்கும் ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். வங்கிகளுடன் இணைந்து, 57 அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கங்களும் இந்த சேவையில் ஈடுபட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement