கோயில் மாநகர் மதுரை: தலைமை நீதிபதி பெருமிதம்
மதுரை: ''மதுரை பாரம்பரியம், நாகரீகமிக்க கோயில் மாநகரம். கண்ணகி நீதியை நிலைநாட்டிய மண்,'' என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மதுரையில் நடந்த வரவேற்பு விழாவில் பேசினார்.
சத்தீஸ்கர் பிலாஸ்பூரை சேர்ந்தவர் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். இடமாறுதலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 21 ல் பதவியேற்றார்.
முதன்முறையாக நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வருகை புரிந்தார். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் வரவேற்றார்.
வழக்கறிஞர்கள் பேசியதாவது:
'மகா' வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் : நீதித்துறையின் நீதிபரிபாலனத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கடேசன்: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எம்.எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஐசக்மோகன்லால்: ராஜஸ்தானில் ஸ்ரீவஸ்தவா தலைமை நீதிபதியாக இருந்த போது ஒரு பொதுநல வழக்கில் உத்தரவிட்டதன் அடிப்படையில் அம்மாநிலத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை பின்பற்றி கர்நாடகாவில் சட்டம் வந்தது. அதுபோல் தமிழகத்திலும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை தேவை.
எம்.பி.எச்.ஏ.ஏ., வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திருநாவுக்கரசு: நீதித்துறை, வழக்கறிஞர்கள் இடையே சுமூக உறவு நிலவுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் சி.ஐ.எஸ்.எப்.,போலீசாரின் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும். உள்ளூர் போலீசாரின் பாதுகாப்பே போதுமானது.
பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி தனலட்சுமி: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்றி, பெண் வழக்கறிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு பேசினர்.
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பேசியதாவது: மதுரை பாரம்பரியம், நாகரீகம், கலாசாரம், பண்பாடுமிக்க நகரம். கோயில் மாநகரம். துாங்கா நகரம். கண்ணகி நீதியை நிலைநாட்டிய மண். 'கிழக்கின் ஏதென்ஸ்' என அழைக்கப்படுகிறது. உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அறிவுப்பூர்வமாக, ஆழமான கருத்துக்களுடன் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. நீதித்துறையின் மேல் மக்கள் நம்பிக்கை பெறும் வகையில், எளிதில் அணுகும் வகையில் செயல்பட வேண்டும். சமூகத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
இளம் வழக்கறிஞர்கள், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழக்கறிஞர்களுக்கு ஆயுள்காலம் வரை சட்டத் தொழில உறுதுணையாக இருக்கும். இவ்வாறு பேசினார்.
உயர்நீதிமன்றக்கிளை நிர்வாக நீதிபதி அனிதா சுமந்த், நீதிபதிகள், மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா.கதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் பங்கேற்றனர்.
மேலும்
-
இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்
-
வெனிசுலாவில் கனமழையால் சுரங்கம் இடிந்தது: தொழிலாளர்கள் 14 பேர் பரிதாப பலி
-
புதிய அணை கட்டுவது சாத்தியமா? மத்திய, மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
சாகசம் செய்யும் சட்டக்கல்லுாரி மாணவி
-
மேற்காசியாவில் இனி புதிய உதயம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
-
தமிழாய், தமிழனாய் வாழ்கிறோம்: பெல்ஜியத்தில் பெற்றோம் பெரும் பேறு