போக்சோ நீதிமன்ற நீதிபதிகளுக்கு பயிற்சி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்யும் வகையில் போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு நீதித்துறை அகாடமியின் இயக்குனர் பயிற்சி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி சிவக்குமார், ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய 2024 அக்.,10 ல் கலெக்டர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு: இதுபோன்ற ஒரு வழக்கில் திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு எதிராக குண்டர் சட்ட கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்கும், மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கிற்கும் வேறுபாடு உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜாமின் அனுமதிக்கப்பட்ட ஒத்த தன்மையுடைய குற்றங்களை உள்ளடக்கிய வழக்குகளை மட்டுமே தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரி பரிசீலிக்க முடியும். கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஊகிக்க முடியும். மனுதாரர் தரப்பின் வாதத்தை நிராகரிக்கிறோம்.
அரசு தரப்பு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 2024 ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போதிலும் அங்கு விசாரணை இன்னும் துவங்கவில்லை என்பதைக் கண்டு நாங்கள் வருத்தமடைந்தோம்.
பாலியல் குற்ற வழக்குகளில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் புகார்தாரரின் சாட்சியத்தை குறித்த காலத்திற்குள் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி., தாக்கல் செய்ய வேண்டும். தடுப்புக் காவல் காலகட்டம் முடிவடையும்வரை விசாரணையை இழுத்தடித்துக் கொண்டே செல்வதை நாங்கள் காண்கிறோம். இது தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிப்பதன் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது.
குழந்தையிடம் விசாரணை செய்யவில்லை
பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட வழக்குகளின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டோம்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக 343 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.,அறிக்கை தாக்கல் செய்தார். இதை ஆய்வு செய்ததில் ஒரு சில வழக்குகளைத் தவிர, இறுதி அறிக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரணை செய்யவில்லை என்பதைக் காண்கிறோம்.
மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.,யின் அதிகார வரம்பிற்குட்பட்ட மாவட்டங்களில் 52 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இறுதி அறிக்கை தாக்கல் செய்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட குழந்தையை விசாரணைக்கு உட்படுத்துவது போக்சோ சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஒரு சில வழக்குகளை தவிர்த்து, மற்றவற்றை விசாரிக்கத் தவறியது புள்ளி விபரங்களிலிருந்து தெளிவாகிறது.
உயர்நீதிமன்றக் கிளையின் அதிகார வரம்பிற்குட்பட்ட மாவட்டங்களில், போக்சோ சட்டத்தின் அக்குறிப்பிட்ட கட்டாய விதியை முற்றிலும் பின்பற்றுவதில்லை என்பது தெளிவாகிறது. இந்த உண்மையை கருத்தில் கொண்டு, விதியை பின்பற்ற வேண்டிய அவசியத்தை நினைவூட்டும் வகையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சாட்சியம் பதிவு
போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு, தமிழ்நாடு நீதித்துறை அகாடமியின் இயக்குனர் பயிற்சி அளிக்க வேண்டும்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், பாதிக்கப்பட்ட குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும்.
மின்னணு முறையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை உட்பட அனைத்து குற்றப்பத்திரிக்கைகளையும் தகுந்த நேரத்திற்குள், தாமதம் இன்றி, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விளக்க வேண்டும்.
இந்நீதிமன்றத்திற்கு உதவிய அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார் மற்றும் புள்ளி விபரங்களை சமர்ப்பித்த மதுரை போலீஸ் ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா, திருச்சி ஐ.ஜி.,ஜோஷி நிர்மல் குமாரின் முயற்சிகளுக்கு பாராட்டுகளை பதிவு செய்கிறோம். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்
-
வெனிசுலாவில் கனமழையால் சுரங்கம் இடிந்தது: தொழிலாளர்கள் 14 பேர் பரிதாப பலி
-
புதிய அணை கட்டுவது சாத்தியமா? மத்திய, மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
சாகசம் செய்யும் சட்டக்கல்லுாரி மாணவி
-
மேற்காசியாவில் இனி புதிய உதயம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
-
தமிழாய், தமிழனாய் வாழ்கிறோம்: பெல்ஜியத்தில் பெற்றோம் பெரும் பேறு