அமைச்சர்களுடன் சாப்பிடுவது ஒரு குத்தமாய்யா? 'ஓய்வு' வதந்தியால் சித்தராமையா ஆவேசம்!

4

பெங்களூரு : ''அமைச்சர்களுடன் உணவு அருந்துவது ஒரு குற்றம் போன்று சித்தரிக்கிறீர்கள். நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூடாதா?'' என கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.


கர்நாடகாவில் 2023 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

முதல்வர் பதவி



முதல்வராவதில் சித்தராமையாவுக்கும், மாநில காங்., தலைவர் சிவகுமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலிடம் சமாதானப்படுத்தி, 'ஆளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி' என ஒப்பந்தம் போட்டதாக தகவல்கள் வெளியாகின.

'இந்த கணக்கின்படி வரும் நவம்பரில் முதல்வர் சித்தராமையா பதவி விலகுவார்' என, எதிர்க்கட்சியான பா.ஜ., - ம.ஜ.த.,வினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அமைச்சரவை சகாக்களுக்கு முதல்வர் சித்தராமையா இரவு விருந்து அளித்தார். முன்னதாக, 'அவர் பதவி விலகுவதற்காகவே விருந்து தருகிறார்' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.

இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''நாங்கள் இரவு நேரத்தில் ஒன்றாக உணவு சாப்பிடக்கூடாதா. இதில் என்ன தவறு உள்ளது என்று எனக்கு புரியவில்லை. பா.ஜ.,வினருக்கு வேறு வேலையே இல்லை.

''எப்போதாவது தான் நாங்கள் ஒன்றாக இணைந்து சாப்பிடுகிறோம். இதில் தவறு என்ன? உணவுக்காக கூடுவது பெரிய குற்றமா. இதையே திரும்ப திரும்ப ஏன் கேட்கிறீர்கள். அமைச்சரவை சீரமைப்புக்கும், இரவு விருந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:



முதல்வரை மாற்றம் செய்வது கட்சி தலைமை தான்; எம்.எல்.ஏ.,க்கள் அல்ல என்று துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.

தேர்தலில் கட்சி வெற்றி பெற்ற பின், முதல்வராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, முடிவெடுக்கப்படும்.

இரண்டாவது வரிசை



இதை கண்காணிக்க, கட்சி மேலிடம் பார்வையாளர்களை அனுப்பும். இதே முறையில் தான் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். யார் வேண்டு மானாலும் முதல்வராகலாம். நானும் முதல்வராக வேண்டும் என்று தெரிவித்தேன்.

கட் சி யாரை தேர்வு செய்கிறதோ, அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். சித்தராமையாவும், சிவகுமாரும் முதல் வரிசையில் உள்ளனர். இரண்டாவது வரிசையில் நாங்கள் இருக்கிறோம். எனவே, எனக்கும் முதல் வராகும் ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement