சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு

கரூர் : 'சி.பி.ஐ., விசாரணை கேட்டு , உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை' என, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம், ஏமூர் புதுாரைச் சேர்ந்த, உயிரிழந்த சந்திராவின் கணவர் செல்வராஜ், 55, மற்றும் 10 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம், 32, மற்றும் த.வெ.க., உட்பட ஐந்து பேர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று மதியம், செல்வராஜ், 10 வயது சிறுவனின் தாய் ஷர்மிளா, 25, ஆகியோர், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், 'உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை; அதை ரத்து செய்ய உதவிட வேண்டும்' என கேட்டு, சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான அனுராதாவிடம் மனு அளித்தனர்.
செல்வராஜ் கூறியதாவது:
த.வெ.க., கூட்டத்தில் சிக்கி, என் மனைவி சந்திரா உயிரிழந்தார். இதனால், என் மூத்த மகனுக்கு அரசு வேலையும், கூடுதல் நிதி உதவியும் பெற்று தருவதாக கூறி, ஏமூர் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலருமான பால கிருஷ்ணன், விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து வாங்கினார்.
உச்ச நீதிமன்றத்தில் எங்கள் பெயரில் வழக்கு போடத்தான், இப்படி கையெழுத்து பெறுகின்றனர் என்பது எனக்குத் தெரியாது.
எனக்கும், என் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். இங்கே வந்து நான் மனு கொடுப்பது, என் சுயவிருப்பத்தின் பேரில் தான்; யாரும் என்னை மிரட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
உயிரிழந்த சிறுவனின் தாய் ஷர்மிளா கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு, நான் வழக்கு போடவில்லை. என் கணவர் பன்னீர்செல்வம் தான், சி.பி.ஐ., விசாரணை கேட்டார். அவர், எட்டு ஆண்டுகளுக்கு முன், என்னையும், உயிரிழந்த மகனையும் விட்டு பிரிந்து விட்டார். அவருடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.
தற்போது, மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்த நிவாரணத் தொகைக்கு ஆசைப்பட்டு, கணவர் பன்னீர்செல்வம் வழக்கு போட்டுள்ளார். அதை, உச்ச நீதிமன்றம் ஏற்கக்கூடாது. பன்னீர்செல்வத்துக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை.
அவர் எங்கு இருக்கிறார் என்பதுகூட எனக்கு தெரியாது. சட்ட உதவி மையத்தில் மனு கொடுக்க என்னை யாரும் மிரட்டவில்லை. சுயவிருப்பத்தின் பேரிலேயே மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு தெரிவித்தார்.
விரும்பி தான் கையெழுத்திட்டனர்!
ஏமூர் பஞ்., முன்னாள் தலைவர் என்ற முறையில் அனைவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். அடிப்படையில் நானும் ஒரு வக்கீல். செல்வராஜ், சுயவிருப்பத்தின் பேரில்தான், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டார். யாரையும் மிரட்டியெல்லாம் கையெழுத்து பெற முடியுமா? இதற்காக, சட்டரீதியான விசாரணை வந்தால், அதை சந்திக்க தயாராக உள்ளேன்.
- பாலகிருஷ்ணன், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய செயலர், அ.தி.மு.க.,





மேலும்
-
இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்
-
வெனிசுலாவில் கனமழையால் சுரங்கம் இடிந்தது: தொழிலாளர்கள் 14 பேர் பரிதாப பலி
-
புதிய அணை கட்டுவது சாத்தியமா? மத்திய, மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
சாகசம் செய்யும் சட்டக்கல்லுாரி மாணவி
-
மேற்காசியாவில் இனி புதிய உதயம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
-
தமிழாய், தமிழனாய் வாழ்கிறோம்: பெல்ஜியத்தில் பெற்றோம் பெரும் பேறு