கூட்டுறவு வங்கியில் திருடுபோன 1790 சவரன் நகையை மீட்க கோரி எருமை மாட்டிடம் மனு

திருவெண்ணெய்நல்லுார் : உளுந்தூர்பேட்டை அருகே கூட்டுறவு வங்கியில் திருடு போன நகைகளை மீட்டு தரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்திருந்த 1790 சவரன் தங்க நகைகள் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி திருடுபோனது. அப்போதைய டி.ஐ.ஜி., மாசான முத்து, எஸ்.பி.,பகலவன் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டுறவு வங்கியின் முன்பு 5 கட்டங்களாக போராட்டம் நடத்தியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலை 10:00 மணிக்கு, கெடிலம்- பண்ருட்டி சாலை, திருநாவலுார் பஸ் நிறுத்தத்தில், விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் ஏழுமலை, மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி ஆகியோர் தலைமையில் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு நகைகளை மீட்டு தர கோரி சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஷாகுல்ஹமீது மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையெடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்துகலைந்து சென்றனர்.

Advertisement