மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்

2

பால்கர்; மஹாராஷ்டிராவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியால் 500 பள்ளி மாணவர்கள் வாகனங்களிலேயே 12 மணிநேரம் காத்திருந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

மும்பை மற்றும் தானே பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் இன்ப சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர். மொத்தம் 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுடன், வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் சுற்றுலாவில் பங்கெடுத்து இருந்தனர்.

சுற்றுலா முடிந்து அனைவரும் பஸ்களில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். மும்பை-ஆமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் வசை என்ற இடத்தில் வந்தபோது, அங்கு திடீரென போக்குவரத்து நெருக்கடி உருவானது. நேற்று மாலை தொடங்கிய இந்த நெருக்கடியால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எங்கு நகர முடியாமல் நின்றன.

நேரம் ஆக, ஆக வாகனங்களின் எண்ணிக்கை கூடியதே தவிர, போக்குவரத்து நெருக்கடி அகலவில்லை. நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்த போக்குவரத்து நெருக்கடி கிட்டத்தட்ட 12 மணிநேரம் நீடித்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உணவு, குடிநீர் இன்றி அவஸ்தை அடைந்தனர்.

போக்குவரத்து ஸ்தம்பித்த தகவலை அறிந்த போலீசார், அதற்கு தீர்வு காணும் வகையில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர். அதன் பலனாக வாகனங்கள் மெல்ல, மெல்ல நகர்ந்து சென்றது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது; கோட்பந்தர் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இங்கே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது நெருக்கடி மெல்ல, மெல்ல தீர்ந்து வாகனங்கள் சென்று வருகின்றன என்றார்.

Advertisement