நிலச்சரிவுக்கு தீர்வு! மண்ணை தாங்கிப்பிடிக்கும் வேர்கள் மழையால் வலிமையான 'மண் ஆணி'

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, ரூ.4 கோடியில் மண் ஆணி அமைக்கப்பட்டது. அண்மையில் பெய்த மழையால் மண் ஆணியில் பயிரிடப்பட்ட புற்கள் வளர்ந்து, அதன் வேர்கள் மண்ணை தாங்கிபிடித்து நிலச்சரிவான இடங்களில் மண்ணை மேலும் வலிமையாக்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு குஞ்சப்பனை வழியாக செல்லும் சாலை உள்ளது. சுற்றுலா பயணிகள் இச்சாலையில் இயற்கை அழகை ரசித்தவாறு அதிக அளவில் பயணிக்கின்றனர்.
இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டு, நவம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், வியூ பாயிண்ட் மற்றும் குஞ்சப்பனை அருகே 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
பின், நிலச்சரிவை தடுக்க ரூ.4 கோடியில் மண் ஆணி திட்டம் மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்டது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மண் ஆணியில் உள்ள புற்கள் வளர்ந்துள்ளது. இதன் வேர்கள் மண் சரிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மண் ஆணி அமைத்தல் என்பது, மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுத்து, நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும்.
மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் வழியாக மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, 'ஹைட்ரோ சீடிங்' முறையில், புல் வளர்க்கப்படுகிறது.
அதன் மீது 'ஜியோ கிரிட்' எனப்படும், பாலிமர் பொருள்களால் செய்யப்பட்ட இரும்பு பாய்கள் மேல் பகுதியில் பரப்பப்பட்டு, மண் ஆணிகளுடன் இணைக்கப்படும். இது மண் சரிவை தடுக்கிறது.
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் ரூ.4 கோடி மதிப்பில் 3 இடங்களில் மண் ஆணி அமைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் இதன் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.
அதன் பின் புற்கள் வளர தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்ணின் உறுதி தன்மையும் அவ்வப்போது பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் புற்கள் நன்கு வளர்ந்து, அதன் வேர்கள் மண்ணை தாங்கிப்பிடிக்கிறது. ஏற்கனவே நிலச்சரிவான இடத்தில் மண் ஆணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மண் ஆணி திட்டம் கைகொடுத்துள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.--
மேலும்
-
பயணியர் கார் விற்பனை 4% உயர்வு
-
மாதம் 12 லட்சம் ஜோடி 'சாக்ஸ்' திருப்பூரில் இருந்து ஏற்றுமதி
-
பட்டுக்கோட்டை ராஜாமடத்தில் கடல் உணவு நிறுவன தொழில் பூங்கா
-
சென்னையில் வீடு விற்பனை ஜூலை - செப்., இரு மடங்கு
-
ஹிட்டாச்சி ரூ.2,000 கோடி முதலீடு தமிழக அரசுடன் ஒப்பந்தம்
-
துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு