மதுபோதை ஆசாமிகளுக்கு அபராதம்.. ரூ.47.83 கோடி! 20 சதவீதம் மட்டுமே இதுவரை வசூல்

கோவை :மது குடித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு, ரூ.47.83 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதில், 20 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது. மீதமுள்ள தொகையை வசூலிக்க, போலீசார் நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.



விபத்துக்கள் அதிகரிக்க, போக்குவரத்து விதிமீறல்களும் முக்கிய காரணம். இதைத்தடுக்க, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அரசு உயர்த்தியது.

சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் போலீசார் தங்கள் போனில் எடுக்கும் படம் மூலம், அபராதம் விதிக்கும் நடைமுறைகள் உள்ளன.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை செலுத்த போலீசார் கால அவகாசம் வழங்குகின்றனர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வாகன ஓட்டிகள், அபராதம் செலுத்தாமல் சென்று விடுகின்றனர்.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்காக, கடந்த செப்., 25ம் தேதி வரை, ரூ.47.83 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், 20 சதவீதம் அதாவது, ரூ.9.28 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. மீதமுள்ள ரூ.38.54 கோடியை வசூலிக்கும் முயற்சியில், போலீசார் இறங்கியுள்ளனர்.

போலீஸ் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அபராதத்தை நடமாடும் நீதிமன்றம், இ-சலான் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தாத வாகன ஓட்டியின் குடியிருப்புக்கு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, அழைத்து தகவல் தெரிவிக்கப்படும்.

அதன் பின்னரும் பலர் செலுத்தாமல் உள்ளனர். அபராதத்தை வசூலிக்க, வாகனங்களை பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாகனத் தணிக்கையின் போது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

@block_B@

அபராதம் செலுத்தாதது ஏன்?

அபராதம் விதிக்கப்பட்ட சிலரிடம் பேசியபோது, 'பிற போக்குவரத்து விதிமீறல்களை ஒப்பிடுகையில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்கான அபராதம் அதிகம். வாகனத்தை விற்கும்போதோ, பெயர் மாற்றும்போதோ பார்த்துக் கொள்ளலாம்; இப்போது என்ன அவசரம்' என்கின்றனர். வழக்கு பதியும்போதே வாகனத்தையும் பறிமுதல் செய்வது ஒன்றே, 'குடிமகன்களிடம்' அபராதம் வசூலிக்க ஒரே வழி. 'குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு' என்ற சொலவடையை நினைவில் வைத்து, இனியாவது போக்குவரத்து போலீசார் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.block_B

Advertisement