திருமுருகன்பூண்டி நகராட்சியின் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் சர்ச்சை! நல்லாறு ஓடை அருகில் பணிகள் அனுமதியின்றி நடப்பதாக புகார்

திருப்பூர்: திருமுருகன்பூண்டியில், 18 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப்பணி துவங்கியுள்ளது. நல்லாறு ஓடையையொட்டி கட்டுமான இடம், உரிய துறைகளின் அனுமதி பெறாமல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தி.மு.க.,வின் கூட்டணிக்கட்சியான மா.கம்யூ., இன்று முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
திருமுருகன்பூண்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், ஓட்டல், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தற்போது கால்வாய் வழியாக வெளியேறி நல்லாறு மற்றும் நொய்யல் ஆறுகளில் கலக்கிறது. கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் வகையில், 18 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, ரோட்டோரம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இதற்கிடையில், நகராட்சி, 10வது வார்டு சுள்ளிக்காடு நல்லாறு கரையோரம் கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு வாய்க்காலின் சுவர், சில நாட்கள் முன் பெய்த மழையில் இடிந்து விழுந்துள்ளது.
நல்லாறு ஓடையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய கட்டுமானப்பணிக்கு, மா.கம்யூ., கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து, இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
தடையில்லா சான்று பெற அறிவுறுத்தல்
நீர்வளத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ''நல்லாறு ஓடையை ஒட்டி, புறம்போக்கு நிலம் என்ற வகைபாடு அடிப்படையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணியை, நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. பணி தொடர்பாக கருத்துரு அனுப்பி, தடையில்லா சான்று பெற்ற பின் பணியை மேற்கொள்ளுமாறு, ஏற்கனவே, நகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நல்லாறு ஓடைக்குள் கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணி இடிந்துள்ளது என, சிலர் புகார் மனு வழங்கியுள்ளனர்.
இந்த புகார் அடிப்படையில், கள ஆய்வு மேற்கொள்ள, பணி ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டது.
மேலும்
-
பயணியர் கார் விற்பனை 4% உயர்வு
-
மாதம் 12 லட்சம் ஜோடி 'சாக்ஸ்' திருப்பூரில் இருந்து ஏற்றுமதி
-
பட்டுக்கோட்டை ராஜாமடத்தில் கடல் உணவு நிறுவன தொழில் பூங்கா
-
சென்னையில் வீடு விற்பனை ஜூலை - செப்., இரு மடங்கு
-
ஹிட்டாச்சி ரூ.2,000 கோடி முதலீடு தமிழக அரசுடன் ஒப்பந்தம்
-
துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு