ஆஸி., சவாலை சமாளிக்குமா இந்தியா * 'உலக' அரையிறுதியில் எதிர்பார்ப்பு

நவி மும்பை: பெண்களுக்கான உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா, இலங்கையில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) நடக்கிறது. இதன் இரண்டாவது அரையிறுதி இன்று நவி மும்பையில் நடக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா (13 புள்ளி), 4வது இடம் பெற்ற இந்தியா (7) அணிகள் மோதுகின்றன.
யாருக்கு இடம்
இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டியில் மட்டும் வென்றது (3 தோல்வி, 1 ரத்து). துவக்கத்தில் ஸ்மிருதி மந்தனா (7 போட்டி, 365 ரன்) நம்பிக்கை தருகிறார். இவருடன் இணைந்து கைகொடுத்த பிரதிகா (308) காயத்தால் விலகியது இந்தியாவுக்கு பின்னடைவு. புதிய வரவு ஷைபாலி அணியில் சேர்க்கப்படுவாரா அல்லது ஹர்லீன் (169) துவக்கம் தருவாரா என இன்று தெரியும்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 2017 உலக கோப்பை அரையிறுதியில் 115 பந்தில் 171 ரன் எடுத்து, வலிமையான ஆஸ்திரேலியாவை வீழ்த்த உதவினார். மீண்டும் இதுபோல 'ஷ்பெஷல்' பேட்டிங்கை வெளிப்படுத்தினால், 2005, 2017க்குப் பின் மூன்றாவது முறையாக இந்தியா பைனலுக்கு செல்லலாம். ரிச்சா (175), ஜெமிமா (141) தங்கள் பங்களிப்பை தர வேண்டும்.
பவுலிங்கில் ஆல் ரவுண்டர் தீப்தி (133 ரன், 15 விக்.,), பலமாக திகழ்கிறார். ஸ்ரீ சரனி (11), கிராந்தி (8) விக்கெட் வேட்டைக்கு உதவலாம். அதிக ரன்களை விட்டுத்தரும் ஸ்னே ராணாவுக்குப் பதில் ராதா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
சிறந்த அணி
உலக கோப்பை அரங்கில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 9 முறை பைனலுக்கு முன்னேறி, 7 முறை கோப்பை வென்ற அனுபவம் உள்ளது. இத்தொடரில் இதுவரை தோற்காத அணியாக (6 வெற்றி, 1 முடிவில்லை) வலம் வருகிறது.
கேப்டன் அலிசா (294) இன்று அணிக்கு திரும்புவது கூடுதல் பலம். தவிர ஆஷ்லே (265), பெத் மூனே (187), லிட்ச்பீல்டு (185) என பலரும் ரன் சேர்க்கின்றனர். பவுலிங்கில் அனாபெல் (15), அலானா (13), சோபி (8) கூட்டணி அச்சுறுத்தல் தருகிறது.

Advertisement