வியாபாரியிடம் ஷூக்கள் லஞ்சம்: உ.பி.யில் போலீஸ்காரர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஷூ வியாபாரியிடம் 4 ஜோடி பிராண்டட் ஷூக்களை லஞ்சமாக வாங்கிய போலீஸ்காரர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ஷூ வியாபாரி ஒருவருக்கு கடை உள்ளது. இந்த கடைக்கு சென்ற போலீசார், வியாபாரிக்கு ஆதரவாக அறிக்கை தயாரிப்பதற்கு ரொக்கமாக லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு வியாபாரி ரொக்கமாக பணம் தர இயலாது என்று சொன்னவுடன் 4 பிராண்டட் ஷூக்களை லஞ்சமாக போலீசார் பெற்றுள்ளனர்.

அதை தொடர்ந்து ஷூக்களை லஞ்சமாக பெற்ற போலீசார் குறித்து ஆக்ரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததோடு, சிசிடிவி காட்சிகள், பேசிய குரல் பதிவை ஆதாரமாக வழங்கினார்.

இதனையடுத்து ஆக்ரா போலீஸ் கமிஷனர் தீபக் குமார், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களான கவுஷல், விஸ்வநாத் உள்ளிட்ட 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதோடு, இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.


இது குறித்து தீபக் குமார் கூறியதாவது:
இந்த சம்பவம் ஆக்ரா போலீசில் ஒரு பரந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும், பல்வேறு லஞ்ச வழக்குகளில் தொடர்புடைய 9 மற்ற போலீசார் மீதும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊழலுக்கு எதிரான "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை வலியுறுத்தி, இதுபோன்ற கோரிக்கைளை புகாரளிக்க, பொதுமக்களுக்கு 78398-60813 என்ற பிரத்யேக ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு தீபக் குமார் கூறினார்.

Advertisement