நேபாளத்தில் விமான நிலைய ஓடுபாதை விளக்குகளில் கோளாறு: விமான சேவைகள் நிறுத்தம்


காத்மாண்டு: நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விளக்குகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.


நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில்
தரையிறங்கும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.


இந்த இடையூறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை பாதித்துள்ளது. இதனால் தாமதங்கள் மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன. விமான நிலைய அதிகாரிகள் தற்போது இந்தப் பிரச்னையை ஆய்வு செய்து, விரைவில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான சேவை பாதிப்பால் பயணிகள் பலர் சிரமம் அடைந்து உள்ளனர்.


சிக்கலைக் கண்டறிந்து தீர்க்க தொழில்நுட்பக் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இயல்பான செயல்பாடுகள் மீட்டமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.


தற்போது டில்லி விமான நிலையத்தில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது என்பதை அதிகாரிகள் உறுதி செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement