சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஆஜர்

1

சென்னை: தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, அமலாக்கத் துறை தொடர்ந் த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், விசாரணையில் இருந்து வருகிறது.

இதற்கிடையே, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் கார்த்திகேயன், கணேசன் ஆகியோர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், 'இதுதொடர்பான வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விசாரணை முடித்து முடிவெடுக்கும் வரை, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க கூடாது. விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்' என, கோரப்பட்டிருந்தது.

இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகினர். சாட்சி விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க, அமலாக்கத் துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து, அமலாக்கத் துறைக்கு கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement