நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்

'ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்கு
உண்மை தெரிந்தது சொல்வேன்'

என்ற மகாகவி பாரதியின் இனிய வரிகளை, இதழின் நெறிகளாக பின்பற்றும் பெருமைக்குரியது 'தினமலர்' நாளிதழ். தமிழகத்தில் மட்டுமின்றி, அனைத்திந்திய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளை, நடுநிலையோடு வெளியிடுவதை, பத்திரிகை தர்மமாகவே பின்பற்றுகிறது. மக்களுக்கு பயன்படாத நாலாந்தர செய்திகளுக்கு முக்கியத்துவம் தராது, நாட்டு நடப்புகளை உள்ளது உள்ளபடியே உரைக்கும் இதழ் இது. உண்மை என்று உணர்ந்ததை எவருக்கும் அஞ்சாமல் வெளியிடும் துணிவு, தினமலருக்கு மட்டுமே உண்டு.

தலைப்பு செய்தியை வெளியிடும் விதத்திலேயே, அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பாணியும், அரசியல் அவலங்களை, கட்சி வேறுபாடின்றிக் கண்டிக்கும் துணிவும், தினமலருக்கு உண்டு. ஊழல் செய்வோரை, உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில், 'அடங்க மாட்டேங்கறாங்க' என்று அம்பலப்படுத்துவது 'தினமலர்'. 'சிந்தனைக் களம்' என்ற பகுதியில், அவ்வப்போது வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் பொக்கிஷமாக போற்றத்தக்கவை.


ஆன்மிக மலர், சிறுவர் மலர், வார மலர் ஆகிய மூன்று மலர்களும், முக்கனிச் சுவையாக, அந்தந்த வயதினர் விரும்பிப் படிக்கும் விதத்தில் வெளியாவது, பாராட்டத்தக்கப் பணியாகும். நல்ல உள்ளங்களும், நடுநிலையாளர்களும் விரும்பி படிக்கும் விதத்திலும் அல்லது தீமை செய்வோர் அஞ்சிக் கொண்டே படிக்கும் விதத்திலும், எல்லோரது கரங்களிலும் தவழும் 'தினமலர்' நாளேடு, இன்னும் பல்லாண்டுகள் அதன் பயணத்தை தொடர வேண்டும் என, நேசமிக்க வாசகனாக நெஞ்சார வாழ்த்துகிறேன்.


அன்புடன்,
பேராசிரியர் கரு.நாகராசன்
தலைவர், எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம்.

Advertisement