கிரைம் கார்னர் -

பெண்ணை சீண்டிய வாலிபருக்கு 'காப்பு'

அசோக் நகர்: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 26 வயது பெண், சென்னையில் உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிகிறார்.

கடந்த 10ம் தேதி, கோடம்பாக்கம் நாகர்ஜூனா இரண்டாவது தெரு வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த நபர், அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றார். அசோக் நகர் போலீசார் விசாரித்து, கோடம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன், 44 என்பவரை, நேற்று கைது செய்தனர்.

'குடி'மகனின் மொபைல் போன் பறிப்பு

வளசரவாக்கம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 21, கோயம்பேடு பூ சந்தையில் தங்கி, கூலி வேலை செய்கிறார். நேற்று முன்தினம், விருகம்பாக்கம் வந்த இவர், அங்குள்ள அவிச்சு பள்ளி சிக்னல் அருகே 'டாஸ்மாக்' கடையை தேடியுள்ளார்.

அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், மது வாங்கி தருவதாக கூறி ஆறுமுகத்தை பைக்கில் ஏற்றிச் சென்றனர். வளசரவாக்கம் ஜானகி நகர் அருகே, ஆறுமுகத்தை தாக்கி, அவரது மொபைல் போனை பறித்து தப்பினர்.

கேபிள் அறுந்ததால் ஜே.சி.பி., ஓட்டுநருக்கு அறை

வானகரம்: திருவேற்காடு, நுாம்பல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொக்லைன் வாகன ஓட்டுநர் சீனிவாசன், 34. செட்டியார் அகரம் முதல் தெருவில், கடையை இடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது, மேலே சென்ற இணைய கேபிள் அறுந்து விழுந்தது. அப்போது, அங்கு வந்த பா.ஜ., சென்னை மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ், கேபிளை சேதப்படுத்தியதாக கூறி, சீனிவாசனை தாக்கினார். வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் நகையை திருடிய உறவினர் பெண் கைது

திருமங்கலம்: மேற்கு அண்ணா நகர், பாடி குப்பம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் உமாபதி, 54. இவரது வீட்டில் 10 சவரன் தங்க நகைகள் திருடுபோயின.

உமாபதி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர் பெண்ணான, அம்பத்துாரைச் சேர்ந்த காளீஸ்வரி, 27; என்பவர், வீட்டில் சிறுக சிறுக நகை திருடியது, போலீசார் விசாரணையில் தெரிந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

4 கிலோ கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

அண்ணா நகர்: பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், நேற்று மதியம், அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பார்சலுடன் வெளிவந்த நீலகிரி மாவட்டம், கூடலுாரைச் சேர்ந்த ஜீவேந்திரன், 24, என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். ஒடிஷா மாநிலம், முனிகுடா பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தது தெரிந்தது.

தலைமறைவு குற்றவாளிகள் பிடிபட்டனர்

சென்னை: கிண்டி காவல் நிலையத்தில், 2024ல் வழிப்பறி வழக்கில் கைதான, மடுவன்கரையைச் சேர்ந்த சீனிவாசன், 27; போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் வண்ணாரப்பேட்டை போலீசில் கைதான வேங்கையன், 29, ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமினில் வந்த இவர்கள் தலைமறைவாகினர். அவர்களுக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

அதேபோல், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சித்தார்த்தன், 22, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியின் வீட்டில் 4 சவரன் திருட்டு

மதுரவாயல்: மதுரவாயலைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 65, இரு தினங்களுக்கு முன் வெளியே சென்ற நிலையில் வீட்டு பீரோவில் இருந்த 4 சவரன் நகை, 20,000 ரூபாய் திருடு போனது.

இது குறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரை அடுத்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement